அமெரிக்காவில் கொரோனாவின் 2-வது அலை வீச வாய்ப்பு: வீரியமானதாக இருக்குமென எச்சரிக்கை
அமெரிக்காவில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போதைய நிலையை விட மோசமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளை வெகுவாக பாதித்து வருகிறது. அமெரிக்காவில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 45ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போதைய நிலையை விட மோசமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவில் வரவிருக்கும் குளிர்காலத்தில் ஏற்படும் கொரோனா வைரஸ் தாக்குதல், தற்போதைய சூழலைவிட மிகவும் வீரியத்துடன் இருக்கும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தலைவர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவை தளர்த்த கோரி நடைபெற்றுவரும் போராட்டங்களை தொடர்ந்து பல மாகாணங்களில் கட்டுப்பாட்டை தளர்த்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மருத்துவ நிபுணர்கள், வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்காவில் கொரோனாவின் இரண்டாம் அலை வீச வாய்ப்பிருப்பதால் தனிமனித இடைவெளியை தொடருவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.