10 மீட்டர் உயரம்.. 100 கி.மீ. தூரம்.. உருவாகப்போகும் மிகப்பெரிய சுனாமி.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
செய்தியாளர் - ராஜ்குமார். ர
கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவாகும். இங்கு பெரும்பாலான நிலப்பரப்புகள் பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் பனிப்பாறைகள் மற்றும் மலைப்பகுதிகளைக் கொண்டிருப்பதால், கிரீன்லாந்து பலரது விருப்பமான சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. இத்தகைய சூழலில், இந்தத் தீவுப் பகுதியில் மிகப்பெரிய சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் புவியியல் ஆய்வு நிறுவனமான GEUS மற்றும் நார்வேயின் Norwegian Geotechnical Institute ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து கிரீன்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள Uummannaq Fjord பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில், இரண்டு பெரிய மலைச்சரிவுப் பகுதிகள் தொடர்ந்து நகர்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
உலக வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுவதுடன், மலைப்பகுதிகளில் உள்ள Permafrost எனப்படும் நிரந்தர உறைபனியும் பலவீனமடைந்து வருகிறது. இதனால், பெரிய பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்து சுனாமி அலைகளை உருவாக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கிரீன்லாந்தில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு மலைச்சரிவுப் பகுதிகள் விஞ்ஞானிகளின் கவனத்தைப் பெற்றுள்ளன.
இதில் முதலாவது மலைச்சரிவுப் பகுதி Karrat Fjord பகுதியில் அமைந்துள்ளதாகவும் இந்த மலைச்சரிவுப் பகுதியில் சுமார் 40 கோடி கன மீட்டர் அளவிலான பாறைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இரண்டாவது மலைச்சரிவுப் பகுதி Kangerluarsuk Fjord பகுதியில் அமைந்துள்ளது. இந்த இரண்டு மலைச்சரிவுப் பகுதிகளும் முழுமையாகச் சரிந்து கடலுக்குள் விழுந்தால், மிகப்பெரிய சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதன்படி சுனாமி உருவானால் அதன் அலைகள் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவுக்குப் பரவுவதுடன், கடலோரப் பகுதிகளில் 10 மீட்டருக்கும் அதிகமான உயரத்தை எட்டக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிரீன்லாந்தில் இதற்கு முன்பும் பாறைகள் மலைப்பகுதியிலிருந்து சரிந்து கடலுக்குள் விழுந்து சுனாமி ஏற்பட்ட வரலாறும் உள்ளது.. இந்நிலையில், கிரீன்லாந்தில் தற்போது கண்டறியப்பட்டுள்ள இரண்டு மலைச்சரிவுப் பகுதிகளையும் அந்நாட்டு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. குறிப்பாக, மலைப்பகுதிகளில் ஏற்படும் சிறிய அளவிலான நகர்வுகள் மற்றும் பாறைச் சரிவுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
