கழிவறையில் சரிந்துகிடந்த உடல்.. சவுதி இளவரசர் அதிர்ச்சி மரணம்! பிரேதப் பரிசோதனையில் வெளியான தகவல்!
சவுதி அரேபியாவின் இளவரசர் திடீரென மரணம் அடைந்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்பது குறித்து இந்தக் கட்டுரையில் அறியலாம்.
செய்தியாளர் - கார்த்திகேயன்
சவுதி அரேபியாவின் இளவரசராக இருந்தவர் அப்துல்லா பின் ஃபஹத். 29 வயதான இவர், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக, லண்டனில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில், சிகிச்சை பெற்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, லண்டன் கென்சிங்டனில் உள்ள மேரியட் என்ற சொகுசு ஹோட்டலின், 5-ஆவது தளத்தில் இளவரசர் அப்துல்லா அறை எடுத்து தங்கி வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அந்த அறையின் கழிவறையில் இளவரசர் மயங்கிக் கிடந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த ஓட்டல் ஊழியர் அளித்த தகவலின்படி, மயங்கிக் கிடந்த இளவரசருக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவக் குழுவினர் விரைந்து வந்துள்ளனர். இருப்பினும், இளவரசர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு, நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, அளவுக்கு அதிகமான போதைப்பொருட்கள் மற்றும் மதுபானக் கலவையால் இதயத் துடிப்பு முடங்கி அவர் உயிரிழந்திருப்பதாக, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கிலாந்தில் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட மதுவின் அளவைவிட 3 மடங்கு அதிக அளவு அவரது ரத்தத்தில் இருந்ததும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆபத்தான போதைப்பொருள் அபாயகரமான அளவில் இருந்தது என்றும், கஞ்சா மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல்வேறு மாத்திரைகளின் தடயங்கள் கண்டறியப்பட்டன என்றும் கூறப்பட்டுள்ளன.
இளவரசர் தற்கொலை செய்துகொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், பிறர் எவரும் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும் CCTV காட்சிகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இது ஒரு விபத்து மரணம் என மரண விசாரணை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

