தூங்கும் இளவரசர் மரணம்... கோமாவில் 20 ஆண்டுகள்; யார் இவர்? என்ன நடந்தது?
சவுதி இளவரசர் அல்வலீத் பின் கலீத் பின் தலால் கடந்த சனிக்கிழமை (19.7.2025) தனது 36வது வயதில் காலமானார். "தூங்கும் இளவரசர்" என்று அழைக்கப்படும் அவர், லண்டனில் நடந்த ஒரு கார் விபத்தில் கோமா நிலைக்குச் சென்றார். இதனால், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக கோமாவிலேயே தனது வாழ்நாளை கழித்தார். கோமாவில் இருந்த அவருக்கு இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இருப்பினும், எந்த சிகிச்சையும் இவருக்கு கைகொடுக்கவில்லை.
அவருடைய மறைவை, அல் வாலீத்தின் தந்தையான இளவரசர் கலெத் பின் தலால் அல் சவுத் உறுதி செய்துள்ளார். இளவரசரின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என்றும், பக்ரியா மாவட்டத்தில் உள்ள அரண்மனையில் உடல் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் , 2-ந்தேதி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த தூங்கும் இளவரசர்!
சவூதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த இளவரசர் கலெத் பிண் தலால் அல் சவூத்தின் மகன்தான் இளவரசர் அல்வாலீத் பின் கலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ். இவர் ஏப்ரல் 18 1990 அன்று பிறக்கிறார்.
2005 ஆம் ஆண்டில் லண்டனின் உள்ள ஒரு ராணுவக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இந்தநிலையில்தான், 15 வயதில் மிகப்பெரிய கார் விபத்தில் சிக்கிய இவருக்கு, மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட கடுமையான உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
இவரை கோமா நிலையிலிருந்து மீட்பதற்காக பல்வேறு கட்ட சிகிச்சைகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்துள்ளது.
அதுமட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள மிக பிரசித்தி பெற்ற மருத்துவர்களும் இவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை.
2015ஆம் ஆண்டு, இவரது உயிர்காக்கும் கருவிகளை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு குடும்பத்தினருக்கு மருத்துவர்களை பரிந்துரைத்துள்ளனர். ஆனால், இளாவரசரின் தந்தை கலீத் எப்படியாயினும் தனது மகன் உடல்நலம் பெறுவார் என்று உறுதியாக கூறி அதனை மறுத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு இளவரசரின் விரல், தலை உள்ளிட்டவை சில அசைவுகளை கொடுத்துள்ளது. இது அவரது குடும்பத்தினருக்கு இளவரசர் பிழைத்துவிடுவார் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.
ஆனால், அதன்பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதுதான் கசக்கூடிய உண்மை. இப்படி கடந்த 20 ஆண்டு காலமாக கோமாவிலேயே கழித்த இளவரசர் அல்வலீத், நேற்று முன் தினம் மரணமடைந்திருப்பது அவரது குடும்பத்தில் மீளா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.