சவுதி அரேபியாவில் தனது மகனை பட்டத்து இளவரசராக நியமித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் மன்னராக இருந்து வந்தவர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ். இவர் 2015ம் ஆண்டு மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அவர் சகோதரர் சல்மான் மன்னர் ஆனார். இவர், இளவரசர் முகமது பின் நயேப்யை, பட்டத்து இளவரசராகவும், இளவரசர் முகமது பின் சல்மானை, பட்டத்து துணை இளவரசராகவும் நியமித்தார்.
இந்நிலையில் துணை இளவரசரான முகமது பின் சல்மானை (31), பட்டத்து இளவரசராக நியமித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். மேலும் பட்டத்து இளவரசராக இருந்த முகமது பின் நயேப், உள்துறை அமைச்சராக பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முகமது பின் சல்மான், ராணுவம், எண்ணெய் உள்ளிட்ட துறைகளின் பொறுப்பையும் கவனிப்பார்.
முகமது பின் சல்மானுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சவுதி அரேபியாவில் நிலவி வந்தது. கத்தாருடனான தூதரக உறவை சவுதி முறித்துக்கொண்ட சூழலில், இந்தப் பதவி உயர்வு அவருக்கு வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் இந்த மாற்றம் காரணமாக, வாரிசுரிமை தொடர்பான நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.