சவுதியில் நிலவும் போர் சூழல்.. எகிறும் கச்சா எண்ணெய் விலை.. இந்தியாவுக்கு வரப்போகும் சிக்கல்
மேற்கு ஆசியாவில் அதிகரிக்கும் போர் சூழல் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எண்ணெய் உற்பத்தியில் முக்கியமான நாடான சவுதி அரேபியாவில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதல்கள், உலகளாவிய எண்ணெய் விநியோகத்துக்கே சவாலாக மாறும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இந்தியாவிற்கு என்ன சிக்கல் ஏற்படும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஏமன் நாட்டைச் சேர்ந்த ஈரானின் ஆதரவு ஹவுதி கிளர்ச்சிப் படையினர் சவுதி அரேபியாவில் விமான நிலையங்கள் உள்ளிட்ட இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல்கள் மேலும் தீவிரமடையலாம் என்ற அச்சம் அதிகரித்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பணிகளில் இருந்து அவசரப் பணியல்லாத அரசு ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தியோ, அதைக் கொண்டு செல்லும் போக்குவரத்தோ பாதிக்கப்பட்டால், உலகச் சந்தைக்கு வரும் எண்ணெயின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கான முக்கியக் காரணமாக அமையும்.
அக்டோபர் 22-ம் தேதி அதிகாலை நிலவரப்படி, 1 பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.2 சதவீதம் உயர்ந்து ஒரு பேரலுக்கு 110.11 டாலராக இருந்தது. அமெரிக்கச் சந்தையின் முக்கிய அளவுகோலான WTI கச்சா எண்ணெய் விலையும் 1 சதவீதம் உயர்ந்து 98.12 டாலரை எட்டியது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கூடுதல் தாக்கத்ததை ஏற்படுத்தும்.
குறிப்பாக இந்தியா போன்ற இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் நாடுகள் எண்ணெய் வாங்குவதற்கு கூடுதல் தொகை செலவிடும் நிலை ஏற்படலாம்.
இதனிடையே, வளைகுடா கடல் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் குறைந்தது 18 கப்பல் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தக் கப்பல் தாக்குதல்களும் சேர்ந்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தை அதிகரித்துள்ளன.
இதே போன்று எண்ணெய் வயல்கள் தொடர்ந்து தாக்கப்பட்டாலோ, எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலோ, விநியோக நெருக்கடி அதிகரித்து விலை மேலும் உயர அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த சூழலில், இந்தியாவின் நிலை முக்கியமானது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெயில் பெரிய பகுதியை வெளிநாடுகளில் இருந்துதான் வாங்குகிறது. 2025-26 நிதியாண்டுக்கான தரவுகளின்படி, இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையில் சுமார் 88.7 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தால், இந்தியா அதே அளவு எண்ணெயை வாங்குவதற்கே அதிகத் தொகை செலவிட வேண்டிய அவசியம் ஏற்படலாம். இதன் தாக்கம் பெட்ரோல், டீசலில் தொடங்கி டீசலை நம்பியிருக்கும் சரக்குப் போக்குவரத்துச் செலவுகளும் அதிகரிக்கும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் அழுத்தம் ஏற்படலாம். சர்வதேச எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்துக்கும் கவனிக்க வேண்டிய விஷயமாகிறது.
ஹவுதி தாக்குதல்களால் அதிகரித்துள்ள பதற்றம், ஏற்கெனவே உயர்ந்திருக்கும் கச்சா எண்ணெய் விலையில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த மோதல் நீடித்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டால், இந்தியாவின் இறக்குமதிச் செலவும் அதிகரிக்கலாம். இனிவரும் நாட்களில் எண்ணெய் விலையைத் தீர்மானிப்பதில், மேற்கு ஆசிய மோதலின் அடுத்தகட்ட நகர்வுகளும் விநியோக நிலவரமுமே முக்கியமாக இருக்கும்.
