\
iran war
iran war AI

2 முக்கிய கடல்வழிகள் முடக்கம் எண்ணெய் உலகுக்கு பேராபத்து! ஹவுதி–ஈரான் ஆட்டத்தால் உலகம் அதிர்ச்சி!

ஹவுதி–ஈரான் மோதல் உலக எண்ணெய் விநியோகத்தையும் கப்பல் போக்குவரத்தையும் முடக்கி உலக சந்தைகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
Published on
Summary

ஹார்முஸ், பாப் அல்-மந்தப் நீரிணைகள் மீது போர் அழுத்தம் அதிகரித்து, ஹவுதி–ஈரான் தொடர்பான தாக்குதல்கள் காரணமாக உலக எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சவுதியின் East-West குழாய் மூடப்பட்டதால் மாற்றுப் பாதையும் முடங்கியுள்ளது. இதனால் பிரெண்ட் கச்சா விலை பேரலுக்கு 100 டாலரை கடந்து, அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியும் உலக சந்தை அதிர்ச்சியில் உள்ளது.

செய்தியாளர் - M. மீரா

உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான இரண்டு கடல்வழிகளான ஹார்முஸ் நீரிணை மற்றும் பாப் அல்-மந்தப் நீரிணை தற்போது அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் மற்றும் பதற்றம் காரணமாக உலகளாவிய எண்ணெய் சந்தையில் மீண்டும் கடும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள், தெற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஷரூரா (Sharurah, ) ராணுவ தளத்தின் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளன.

Bab al mandeb Map
Bab al mandeb Map reuters

ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தளத்தில் இருந்த ஆயுதக் கிடங்குகள் மற்றும் தங்கள் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏற்கெனவே பதற்றத்தில் உள்ள செங்கடல் பகுதியில் ஹவுதிகளின் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. ஏமனின் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஹவுதிகள் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா–ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக இருக்கும் இந்த நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Houthi attacks Saudi Energy facelity
Houthi attacks Saudi Energy facelity Reuters

இதற்கிடையே, ஏமனின் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஹவுதிகள் முன்னேறியிருப்பது புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான மொகா நகரம் (Mokha) மற்றும் பெரிம் தீவு (Perim Island ) ஹவுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரிம் தீவு பாப் அல்-மந்தப் நீரிணைக்குள் அமைந்துள்ளது. இந்த நீரிணை செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கிறது. சர்வதேச வர்த்தகத்திற்கும் சவுதி எண்ணெய் ஏற்றுமதிக்கும் இது முக்கியமான பாதையாகும்.

இதற்கிடையே, செங்கடலை நோக்கி எண்ணெயை கொண்டு செல்லும் சவுதியின் முக்கிய East-West எண்ணெய் குழாயிலும் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதலுக்குப் பிறகு சவுதி அரேபியா அந்தக் குழாயை மூடியுள்ளது. இந்த தாக்குதல்களில் பலர் காயமடைந்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Strait of Hormuz
Strait of HormuzANI

இந்த குழாய், ஹார்முஸ் நீரிணையை தவிர்த்து செங்கடல் வழியாக எண்ணெயை ஏற்றுமதி செய்ய சவுதிக்கு மாற்றுப் பாதையை வழங்குகிறது. எனவே, குழாய் மீதான தாக்குதல் உலக எண்ணெய் விநியோகத்தில் மேலும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாப் அல்-மந்தப் அடுத்த போர்க்களமா?

ஏமனில் ஹவுதிகளின் முன்னேற்றம் காரணமாக பாப் அல்-மந்தப் நீரிணையும் முக்கியமான போர்க்களமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் சுமார் 10 சதவீதம் இந்த நீரிணை வழியாக செல்கிறது. தற்போது அப்பகுதியில் எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்வதை தவிர்த்து, நிலைமையை கண்காணிக்கும் வகையில் காத்திருப்பதாக கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஈரான் போர் முடிந்தாலும் சர்வதேச வர்த்தகம் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்புவது கடினமாக இருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

பாப் அல்-மந்தப்
பாப் அல்-மந்தப்Chatgpt

இவ்வாறு ஹார்முஸ் நீரிணை முற்றுகை, கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாப் அல்-மந்தப் பகுதியில் ஹவுதிகளின் முன்னேற்றம் ஆகியவை இணைந்து உலக எண்ணெய் சந்தையை அதிர வைத்துள்ளன.

இதன் விளைவாக சர்வதேச சந்தையின் முக்கிய குறியீடான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை கடந்துள்ளது.

அமெரிக்காவிலும் இதன் தாக்கம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. அங்கு டீசல் விலை சராசரியாக ஒரு கேலனுக்கு 6 டாலரை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலிபோர்னியாவில் சில பெட்ரோல் நிலையங்களில் டீசல் விலை 9.999 டாலர் வரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் தற்போது வெறும் பிராந்தியப் பிரச்சினையாக இல்லாமல், உலக எண்ணெய் விநியோகம், கப்பல் போக்குவரத்து மற்றும் எரிபொருள் விலைகளையே நேரடியாக பாதிக்கும் நெருக்கடியாக மாறியுள்ளது.

iran war
ஈரான், அமெரிக்காவின் அடுத்த வியட்நாமா? ஆயுதங்கள் காலி.. நெருக்கடியில் ட்ரம்ப்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com