சவுதியில் பெண்கள் ஆடைகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு...!
சவுதி அரேபியாவில் பெண்கள் ஆடைகளுக்கான கட்டுப்பாட்டை தளர்த்தப்பட்டுள்ளதால் அந்நாட்டு பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் கார் ஓட்ட சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
சவுதிஅரேபியாவில் பெண்கள் கார் ஓட்டத் தொடங்கியுள்ள நிலையில் தற்போது ஆடைகளுக்கான கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டுள்ளது. இளவரசர் சல்மானின் இந்த நடவடிக்கை சவுதி அரேபியா பெண்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இளவரசரின் அந்த உத்தரவில் பெண்கள் வெளியில் வரும்போது உடலை முழுவதும் மறைக்கும் நாகரிக உடைகள் அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாகரிக ஆடைகளின் விற்பனை சவுதி அரேபியாவில் சூடுபிடித்துள்ளது. பெண்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு பெண்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது.