முதல்முறையாக முஸ்லிம் அல்லாதவர்க்கு மது விற்பனை.. ஆனால்? சவூதியில் கொள்கை மாற்றமா?
சவூதி அரேபியாவில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மீண்டும் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த வளர்ச்சி இஸ்லாமிய நாட்டில் குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தைக் குறிக்கிறது.
உலகில் இஸ்லாமியர்களின் கோட்டையாக விளங்கும் சவூதி அரேபியாவில், மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி மது அருந்துபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. 1952ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் மன்னர் அப்துல் அஜிஸின் மகன் குடிபோதையில் ஒரு பிரிட்டிஷ் தூதரக அதிகாரியை சுட்டுக் கொன்ற பிறகு, கடுமையான மதுவிலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில், அரசு சார்பில் முதல் மதுபானக் கடை கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியா அரசு வணிக தளங்கள், சுற்றுலாத் தலங்களைச் சமீபகாலமாக ஊக்குவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மீண்டும் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த வளர்ச்சி இஸ்லாமிய நாட்டில் குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தைக் குறிக்கிறது.
அந்த வகையில் இந்த மதுக்கடையில், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுத் தூதர்களுக்கு மது விற்பனை தொடங்கப்பட்டது. அதாவது, நீங்கள் ஒரு முஸ்லிம் அல்லாதவராக இருந்து, உங்கள் மாத வருமானம் சுமார் $13,300 (சுமார் ரூ.12 லட்சம்) இருந்தால், ரியாத்தில் உள்ள நாட்டின் ஒரே மதுபானக் கடைக்குள் நடந்து சென்று ஒரு பீர் வாங்கலாம் என்றும், வெளிநாட்டினர் தங்கள் வருமானத்தை நிரூபிக்க கடையில் சம்பள சான்றிதழைக் காட்ட வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.
தற்போது, சவூதி அரேபியாவில் சராசரி மாத சம்பளம் சுமார் $2,750 (ரூ. 2,47,336) ஆகும். முன்னதாக, மதுபானக் கடை திறக்கப்பட்ட பிறகு, தூதர்கள் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டியிருந்தது. அங்கு, வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து அனுமதிக் குறியீட்டையும் மாதாந்திர கொள்முதல் ஒதுக்கீட்டையும் பெற்றனர். ஆனால், இப்போது, அதிக வருமானம் கொண்ட முஸ்லிம் அல்லாத குடியிருப்பாளர்களும் மதுபானம் வாங்கத் தகுதி பெறுவார்கள். தவிர, ஜெட்டா மற்றும் தஹ்ரான் ஆகிய இரண்டு நகரங்களிலும் புதிய மதுபானக் கடைகள் திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

