மேற்காசிய போரில் திருப்பங்கள்.. எகிப்திற்கு பரவிய பதற்றம்.. துறைமுகங்கள் மீது தாக்குதல்!
மத்திய கிழக்கில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் அமெரிக்கா, ஈரான் போர் தற்போது புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. சவுதி அரேபியா நேரடியாக போரில் களம் கண்டுள்ளதுதான் அத்திருப்பம். ஈராக்கில் நிலைகொண்டுள்ள ஈரான் ஆதரவுப் படைகள் மீது சவுதி படைகளும் தாக்குதல் நடத்திள்ளன. மற்றொருபுறம் போரில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாமல் மத்தியஸ்தராக இருந்த எகிப்திலும் தாக்குதல் நடைபெற்றது. எகிப்து துறைமுகத்தில் இருந்த அமெரிக்க எரிவாயு டேங்கர் கப்பல்கள் மீதும் ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.
இது ஈரான் அல்லது அதன் ஆதரவு படையால் நடந்ததாக உறுதிப்படுத்தப்பட்டால் போரின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது. சவுதி அரேபியாவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டதும் போரில் இருந்து இஸ்ரேல் அண்மைக்காலமாக விலகிநிற்பதும் போரின் போக்கு குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
போர் ஆறாவது மாதத்தை தொட உள்ள நிலையில் மேற்காசிய பகுதியில் அமெரிக்காவின் படைபலங்கள் மிகவும் பலவீனமடைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னொருபுறம் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தலும் இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தலும் வரவிருப்பதால் இரு நாடுகளுமே போர் வியூகம் குறித்த குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் மேற்காசிய போர் எத்திசையில் நகரும் என கணிக்க முடியாததாக உள்ளதாக சர்வதேச அரசியல் விவகார நிபுணர்கள் கூறுகின்றனர்.

