கத்தார் உறவை முறித்தது சவூதி - எகிறப்போகிறது கச்சா எண்ணெய் விலை
பயங்கரவாதத்தில் இருந்து தங்கள் நாட்டைக் காப்பாற்றிக் கொள்ள சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட 4 நாடுகள், கத்தாருடனான நல்லுறுவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளன. இதனால், கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கத்தார், ஐ.எஸ்.ஐ.எஸ், மற்றும் அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது எனக் கூறி, சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 4 நாடுகள், கத்தார் நாட்டுடன் இருந்த தூதரக உறவை முறித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளன. ராஜதந்திர மற்றும் தூதரக உறவுகளை துண்டிக்க, அந்நாட்டுடனான தரை, கடல் மற்றும் வான்வழி தொடர்பையும் துண்டிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம், அந்நாட்டிலிருந்து பெறப்படும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை இனி பெற இயலாது. இதனால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சவுதி அரேபியாவுடன் உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணம் மேற்கொண்ட ஒரு மாத்திற்குள்ளேயே ஐக்கிய அரபு நாடுகள், கத்தார் நாட்டுடனான உறவுகளை துண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், பொய்யான தகவல்களை கூறி தங்களது நாட்டுனான உறவை முறித்து கொள்ள நினைப்பது நியாயமல்ல என்று தெரிவித்துள்ளது.