சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனத்தை இயக்க அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், புதிய போக்குவரத்து விதிகளை மன்னர் முகமது பின் சல்மான் அறிவிக்கவுள்ளதாகவும், ஆண்களைப் போல பெண்களுக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய உத்தரவு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட தடை உள்ள நிலையில், அதை மீறிய பெண் உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதிய உத்தரவு அமலானதும் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கிய கடைசி நாடு என்று பெயரை சவுதி அரேபியா பெறவுள்ளது. எனினும், அரசின் இந்த முடிவுக்கு மத அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. சவுதி அரேபியாவில் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை 2030ஆம் ஆண்டுக்குள் அமல்படுத்துவதில் மன்னர் முகமது பின் சல்மான் தீவிரம் காட்டி வருவதன் ஒரு பகுதியாக, பெண்களும் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படவுள்ளனர்.