ஓரினத் திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா: ஆஸி நாடாளுமன்றத்தில் தாக்கல்
ஓரின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்காக கொண்டு வரப்பட்ட மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஓரின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்புக்கு 60 சதவிகித மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்குவதற்குள், இதற்கான சட்டம் இயற்றப்பட்டு, ஓரின திருமணம் சட்டப்பூர்வமாக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் வாக்குறுதி அளித்தார்.
இதன் அடுத்தக்கட்டமாக சட்டப்பூர்வமாக்குவதற்கான மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மசோதாவை அறிமுகம் செய்த ஆளும் கட்சி எம்.பி டீன் ஸ்மித்துக்கு சக எம்.பி.க்கள் எழுந்து நின்று பாராட்டுத் தெரிவித்தனர். அத்துடன் கட்சி பாகுபாடின்றி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதே சமயம் தனி நபர் சுதந்திரம் தொடர்பாக மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த சில எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மசோதாவை தாக்கல் செய்த ஸ்மித்தும் ஓரினச் சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.