ஏஐ தொழில்நுட்பத்தின் எதிர்காலம் | எச்சரிக்கை மணி அடித்த சாம் ஆல்ட்மென்!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது செயற்கை நுண்ணறிவு (AI). இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அந்த வளர்ச்சியை மேலும்மேலும் உயர்த்தும் நோக்கில் போட்டிபோட்டுச் செயல்பட்டு வருகின்றன தொழில்நுட்ப நிறுவனங்கள். இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சிய நிலையில், தற்போது சீனாவும் போட்டியில் களத்தில் குதித்துள்ளது.
தவிர, அது சமீபத்தில் அறிமுகப்படுத்திய புது மாடலால் அமெரிக்க மற்றும் உலக வர்த்தகப் பங்குச் சந்தைகளே ஆட்டம் கண்டன. ஆம், சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீக், செயற்கை நுண்ணறிவு துறையில் (ஏஐ) மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது. சீனாவில் உருவாக்கப்பட்ட மலிவு விலை செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக், அமெரிக்காவின் சாட்ஜிபிடியை உலக அளவில் பதிவிறக்கத்தில் விஞ்சியது.
எனினும், டீப்சீக்கில் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பானதாக இல்லை என வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியல், தங்கள் எல்லைகளுக்குள் டீப்சீக்கைப் பயன்படுத்துவதை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடை செய்துள்ளது.
இந்த நிலையில், “வரும் நாட்களில் மென்பொருள் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செய்யும்” என ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மென் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ‘வருங்கால ஏஐயின் வளர்ச்சி’ தொடர்பாக அவர் எழுதிய இணையக் கட்டுரையில், “தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் ஏஐ ஏஜெண்ட்கள் மெய்நிகர் சக பணியாளர்களை போன்று உருவெடுப்பார்கள். எனினும் ஏஐ ஏஜெண்ட்கள் மனிதர்களின் பணியை முழுமையாக மாற்றிவிடமாட்டார்கள்” என சற்று ஆறுதல் வார்த்தையையும் தந்துள்ளார். ஏற்கெனவே ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்து வரும் வேளையில் சாம் ஆல்ட்மெனின் இந்தக் கருத்து எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.