'சல்மான் ருஷ்டி உயிர்பிழைத்ததை நம்ப முடியவில்லை' - தாக்குதலில் ஈடுபட்டவர் பேட்டி

'சல்மான் ருஷ்டி உயிர்பிழைத்ததை நம்ப முடியவில்லை' - தாக்குதலில் ஈடுபட்டவர் பேட்டி
'சல்மான் ருஷ்டி உயிர்பிழைத்ததை நம்ப முடியவில்லை' - தாக்குதலில் ஈடுபட்டவர் பேட்டி

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ள ஹாடி மாதர், அவர் உயிர் பிழைத்தது ஆச்சரியமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த 12ஆம் தேதி நியூயார்க்கின் சௌதாகுவா நிறுவனத்தில் நடைபெற்ற புத்தக விழாவில் கலந்து கொண்டார். அப்போது திடீரென மேடைக்கு வந்த ஹாடி மாதர் (24) என்ற இளைஞர் ருஷ்டியின் கழுத்து, வயிற்று பகுதியில் கத்தியால் சராமாரியாக குத்தி தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ஒரு கண் பார்வை பறிபோவதற்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ருஷ்டியை தாக்கிய ஹாடி மாதராவ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சல்மான் ருஷ்டி கடந்த 1988ஆம் ஆண்டு எழுதிய ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ (The Satanic Verses) என்ற நாவலை எழுதி வெளியிட்டார். இந்நூல் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக இருப்பதாக பெரும் சர்ச்சையும் எதிர்ப்பும் எழுந்தது. பல நாடுகள் சல்மான் ருஷ்டியின் புத்தகத்திற்கு தடை விதித்தன. ருஷ்டிக்கு எதிராக வெளிப்படையான மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இது அவருடைய உயிருக்கு பெரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. இச்சூழலில்தான் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ள ஹாடி மாதர் 'நியூயார்க் போஸ்ட்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் “எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தது ஆச்சரியமாக உள்ளது. எனக்கு அந்த நபரை (சல்மான் ருஷ்டி) பிடிக்கவில்லை. அவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது. அவர் இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளையும் தாக்கியவர்'' என்று கூறினார்.

நியூ ஜெர்சியை சேர்ந்த ஹாடி மாதர், லெபனானை பூர்விகமாக கொண்டவர். ஹாடி மாதரின் சமூக வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்ததில், அவர் ஷியா தீவிரவாதம், இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை பின்பற்றியுள்ளார் எனத் தெரிய வந்தது. இதனிடையே சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில் ஈரானுக்கு தொடா்பிருப்பதாக வெளியான தகவலுக்கு அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் அதி பயங்கர தீவிபத்து!

 


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com