உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் பதற்றத்துக்கு காரணம் என்ன? : விரிவான அலசல்
உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்க கூடும் என்ற அச்சத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் ரஷ்யாவை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. உக்ரைன் ரஷ்யா இடையே போர் பதற்றம் ஏற்பட காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம்.
ரஷ்யா , உக்ரைன் ஆகிய நாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட மிக முக்கிய காரணம் அதன் புவியியல் அமைப்பு. USE MAP உக்ரைன் ஒரு புறத்தில் ரஷ்யாவையும் மறுபுறத்தில் ஐரோப்பிய நாடுகளையும் எல்லையாக கொண்டிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்த பிறகு உக்ரைன் தனி நாடாக விடுதலைபெற்றது. உக்ரைனின் மேற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாகவும் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் இருக்கின்றனர்.
இதன் காரணமாகவே 2014ஆம் ஆண்டு ரஷ்யா ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் மக்கள் போராட்டத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதே காலக்கட்டத்தில் உக்ரைனுக்கு சொந்தமான கிரைமியா பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. மேலும் கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் தூண்டுதலின் பேரில் கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் படைகளோடு சண்டையிட்டு வருகின்றனர்.
ரஷ்யாவை பொறுத்தவரை உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் வருவது தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்கிறது. மேற்கத்திய நாடுகளோ, உக்ரைன் முழுவதுமாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால் கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதுகின்றன. இந்த சூழலில் கடந்த ஓராண்டு காலமாகவே உக்ரைன் எல்லைக்கு அருகே ஒரு லட்சத்துக்கும் அதிகமான படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா, உக்ரைன் மீது படை எடுக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு தூதர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளன.
அதே வேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களோடு உக்ரைன் விவகாரம் தொடர்பாக 80 நிமிடங்கள் காணொளி ஆலோசனை நடத்தினார். இதில் உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தால், உக்ரைனை பாதுகாக்க படைகளை அனுப்புவது என ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இதன் அடுத்த கட்டமாக அமெரிக்கா 8,500 ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப தயார் நிலையில் வைத்துள்ளது. டென்மார்க், நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கிழக்கு ஐரோப்பியாவில் படைகளை குவிக்க தொடங்கியுள்ளன. இதனிடையே அமெரிக்காவும் நேட்டோ நாடுகளுமே தேவையற்ற பதற்றத்தை உண்டாக்குவதாக குற்றம்சாட்டியுள்ள ரஷ்யா, உக்ரைன் மீது படை எடுக்கப் போகிறோம் என்பதை மறுத்து வருகிறது.
ரஷ்யா உக்ரைனை முழுமையாக கைப்பற்ற நினைக்காது என்கின்றனர் சர்வதேச வல்லுனர்கள். ஏனெனில் உக்ரைன் விவகாரத்தில் பதற்றத்தை உண்டாக்கி பேச்சுவார்த்தை நிலையை கொண்டு வந்து தங்கள் மீதுள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டும், உக்ரைனை நேட்டோ நாடுகள் பட்டியலில் சேர்க்க கூடாது என்ற நிபந்தனைகளை ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்கு விதிக்க கூடும் என சொல்லப்படுகிறது.