ஒரே நாளில் முடிவுக்குவந்த உள்நாட்டு கிளர்ச்சி: எப்படி சமாளித்தார் புதின்? வாக்னர் குழு என்னவாகும்?

ரஷ்யாவில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியால் அந்நாட்டு அதிபர் புதின் தோல்வியடைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
புதின்,
புதின், PT web

ரஷ்ய அரசுக்கு எதிராக, அந்நாட்டு தனியார் ராணுவ கூலிப்படையான வாக்னர் அமைப்பு கடந்த வாரம் திடீர் கிளர்ச்சியை உண்டாக்கியது. இதனால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டது. தலைநகர் மாஸ்கோ உட்பட பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். ரஷ்யாவின் தென்பகுதியில் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றிவிட்டதாகவும், அங்கிருந்து அவர்கள் தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், வாக்னர் குழுவினருக்கும், ரஷ்ய அரசுக்கும் சமரசம் ஏற்பட்டது. பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ முயற்சியில் நடந்த இந்த சமரசத்தில், வாக்னர் குழுத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸினுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு, அவர் பெலாரஸ் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவரது வீரர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என ரஷ்யா அறிவித்தது. பிரிகோஸின் தனது வீரர்களை உக்ரைனில் உள்ள முகாம்களுக்கு திரும்ப உத்தரவிட்டார். இதனால் கடந்த சனிக்கிழமை வெறும் 24 மணி நேரத்தில் இந்த திடீர் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. தலைநகர் மாஸ்கோ உள்பட ரஷ்யாவில் இயல்புநிலை திரும்பினாலும், வாக்னர் கிளர்ச்சிக்குப் பிறகு நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அப்படியே தொடர்கின்றன.

ரஷ்யா
ரஷ்யாபுதிய தலைமுறை

உள்நாட்டுப் போர் தடுத்து நிறுத்தப்பட்டது பற்றிப் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ”ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர், ரஷ்யாவில் ஏற்பட இருந்த உள்நாட்டுப் போரை நிறுத்தியுள்ளனர். நீங்கள் கடினம் வாய்ந்த சூழ்நிலையில், ஒரு தெளிவான மற்றும் நன்றாக ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டு இருக்கிறீர்கள்” என ராணுவ வீரர்களுக்குப் புகழாரம் சூட்டினார்.

அதேநேரத்தில், உள்நாட்டுப் போர் கிளர்ச்சியால் ரஷ்யா உலக நாடுகளால் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. குறிப்பாக, ”தனியார் படையின் கிளர்ச்சி, ரஷ்ய பாதுகாப்பு அமைப்பில் உள்ள குறைபாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அசைக்க முடியாத அதிகாரமிக்க தலைவராகக் கருதப்படும் அதிபர் புதினின் மதிப்புக்கு இந்தச் சம்பவம் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அவருக்கு இது கடுமையான பின்னடைவு. இதன்மூலம், அவர் கட்டமைத்து வைத்திருந்த இமேஜ் சரிந்தே இருக்கிறது. வல்லரசாக கருதப்படும் ரஷ்யா, ஒரு கூலிப்படையுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு இறங்கியுள்ளது” என விமர்சித்துள்ளன.

புடின்
புடின்புதிய தலைமுறை

மேலும் அவர்கள், “இது தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்ட ஒரு நெருக்கடி. இதை அவர் இன்னும் முழுமையாகச் சமாளிக்கவில்லை என்றே தெரிகிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள வாக்னர் படை, அடுத்து ரஷ்ய ராணுவத்துடன் இணையுமா என்பது சந்தேகமே. ஏனெனில், புதினைப் பொறுத்தவரை துரோகம் பிடிக்காது. அதை முழுவதுமாக வெறுப்பவர்.

அதுபோல், கிளர்ச்சியைக் கைவிட்டு வாக்னர் தலைவர் பிரிகோஸின் பெலாரூஸுக்கு செல்வதற்கு என்ன ஒப்பந்தம் செய்யப்பட்டது எனத் தெரியவில்லை. அவர் அமைதியாய்ச் செல்வதற்கு ஏதாவது ரகசியங்கள் இருக்கலாம். அங்கிருந்து அவர் என்ன செய்யப் போகிறார் எனவும் தெரியவில்லை. இதனால், திடீரென சமரசம் ஆகியிருக்கும் இந்த உள்நாட்டுக் கிளர்ச்சி விஷயத்தில் வேறேனும் முக்கியக் காரணங்கள் இருக்கலாம்” என்கின்றனர், அவர்கள்.

பிரிகோஸின்
பிரிகோஸின்புதிய தலைமுறை
முன்னதாக, இக்கலகத்தின் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலும், ஆதரவும் இருப்பதாக புதின் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பதும் இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com