ரஷ்யா | அலெக்சி நவால்னி மரணம்.. செலுத்தப்பட்ட தவளையின் விஷம்.. உறுதிசெய்த 5 நாடுகள்!
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, 2024ஆம் ஆண்டு திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, அலெக்சி நவால்னி விஷம் வைத்தே கொல்லப்பட்டார் என்பதை ஆய்வுகள் உறுதிபடுத்துவதாக அவரது மனைவி யூலியா நவால்னியா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தவளையின் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்துள்ளன.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்ததுடன், அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தும் வந்தார். கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்டவர் அலெக்ஸி நவால்னி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். இதற்கிடையே, கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்போது, அலெக்சி நவால்னி விஷம் வைத்தே கொல்லப்பட்டார் என்பதை ஆய்வுகள் உறுதிபடுத்துவதாக அவரது மனைவி யூலியா நவால்னியா தெரிவித்திருந்தார். ரஷ்யாவில் இருந்து ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்ட நவால்னியின் உடற்கூறு மாதிரிகளை, இரண்டு வெளிநாட்டு ஆய்வகங்கள் பரிசோதித்ததாகவும், இந்த ஆய்வகங்கள் ஒரே முடிவுக்கு வந்ததாகவும் நவால்னியின் மனைவி கூறியிருந்தார். பகுப்பாய்வுகளை நடத்திய ஆய்வகங்கள் அவற்றின் முடிவுகளை வெளியிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், இந்தக் கூற்றை மறுத்த ரஷ்ய சிறை நிர்வாகம், அவர் இயற்கையான முறையிலேயே மரணமடைந்தார் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் உறுதிசெய்துள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இதனை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். அவரது உடலில் எபிபாட்டடின் (Epibatidine) என்ற விஷம் இருந்ததை இந்த நாடுகள் உறுதி செய்தன. இது தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு தவளை இனத்துக்குள்ள விஷம் என இந்த நாடுகள் தெரிவித்துள்ளன. சர்வதேச சட்டவிதிகளைப் புறக்கணித்து இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தி உள்ளது எனக் கூறிய இந்த நாடுகள், ரசாயன ஆயுத பயன்பாடு தொடர்பான விவகாரத்தில் ரஷ்யா மீது இந்த நாடுகள் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தன.
இதுகுறித்துப் பேசிய யூலியா நவால்னியா, "நிச்சயமாக, அது ஒரு கொலை என்று நான் உறுதியாக இருந்தேன். அப்போது, அது வெறும் வார்த்தைகளாகவே இருந்தது. ஆனால் இன்று இந்த வார்த்தைகள் அறிவியல் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மையாகிவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
எபிபாட்டடின் விஷம், இயற்கையாகவே டார்ட் தவளைகளில் காணப்படுகிறது. மேலும் இது ஆய்வகத்திலும் தயாரிக்கப்படலாம். இந்த விஷம் மூச்சுத் திணறல், வலிப்பு மற்றும் இதயத் துடிப்பு குறைவதை ஏற்படுத்துகிறது மற்றும் உயிரையும் கொல்லும்.

