ரஷ்யாவின் லூனா 25 விண்கலம், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆகஸ்ட் 21 அல்லது 22ஆம் தேதி (சந்திரயான் 3க்கு முன்னதாக) இந்த விண்கலத்தை, நிலவின் தென் பகுதியில் தரை இறங்க ரஷ்யா திட்டமிட்டிருந்த நிலையில், தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டது என ரஷ்ய விண்வெளி நிறுவனம் கூறியது. இந்த நிலையில் நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது. லூனா 25 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில் இந்த திட்டம் தோல்வி அடைந்தது.
நேற்றைய தினம் லூனா 25இன் சுற்றுவட்டப்பாதையை குறைக்கும்போது தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நிலவில் மோதியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 47 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.