அனாதையாக கிடந்தது 50 வருட தகவல்: விறகுக்குச் சென்றவர் வியப்பு!
பாட்டிலுக்குள் அடைபட்டு அனாதையாக கிடந்த ஐம்பது வருட தகவலை, இளைஞர் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.
அமெரிக்காவின் அலாஸ்காவை சேர்ந்தவர் டெய்லர் இவனோஃப். இவர் கடற்கரை பகுதியில் விறகு பொறுக்கச் சென்றார். அப்போது அங்கு பாட்டில் ஒன்று கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தார். அதற்குள் இரண்டு பேப்பர் துண்டுகள் இருந்தன. பாட்டிலைத் திறக்க முயன்றார். முடியவில்லை. பின்னர் ஸ்குருடிரைவர் கொண்டு பாட்டிலின் கார்க் மூடியை வெளியே இழுத்தார். பின் அதனுள் இருந்த பேப்பர் துண்டுகளை எடுத்தார். அதில் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது.
அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஆவல். ஆனால், அவருக்கு ரஷ்ய மொழி தெரியாது. அக்கம் பக்கத் தினரிடம், ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என விசாரித்தார். கிடைக்கவில்லை. பிறகு பேஸ்புக்கில் அந்தக் கடிதத்தை புகைப்படம் எடுத்து பதிவிட்டார். இதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் யாராவது மொழி பெயர்த்துச் சொன்னால், நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அந்தப் பதிவு ஆயிரக்கணக்காக, ஷேர் ஆனது. ஒருவர், அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை மொழிபெயர்த்துக் குறிப்பிட்டார். ‘ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான VRXF Sulak என்ற கப்பலில் இருந்து எழுதுகிறேன். இதைக் கண்டுபிடிப் பவர்கள் 43, விஅர் எஸ்க் எப் சுலாக்- விலாதிவோஸ்தோக் ( VRXF Sulak- vladivostok) என்ற முகவரிக்கு பதில் எழுதவும். நீங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவர் கேப்டன் அனடோலி போட்சனேகோ (Anatoly Botsanenko) என்பதும் வருடம் 20 ஜூன் 1969 என்றும் அதில் இருந்தது.
இதையடுத்து ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று கேப்டன் அனடோலி போட்சனேகோ கண்டுபிடித்து, இந்தக் கடிதம் பற்றி கேட் டது. அதைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்த அவர், ’விளையாட்டாக, எதுவரை இந்த தகவல் போகும் என்று அனுப்பினேன்’ என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலிய கடற்கரையில் பாட்டிலுக்குள் மூடப்பட்டிருந்த நிலையில் 51 வருடத்துக்கு முந்தைய தகவல் ஒன்று, சிறுவன் ஒருவனின் கையில் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.