வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் தொலைபேசியில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும், சர்வதேச சட்டங்களையும் மீறி வடகொரியா செயல்பட்டு வருவதாகவும், இதனால் கொரிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் உணர்ச்சிவயப் படாமல் அமைதியான முறையில் செயல்பட வேண்டும் என்றும், அரசியல் ரீதியாக பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதேபோல் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ்ஸும் வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை வடகொரியா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.