70 ஏவுகணைகள்; 611 ட்ரோன்கள்.. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.. கீவ் தேவாலயம் சேதம்!!
நேட்டோ கூட்டணியில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இதையடுத்து, தொடங்கிய இரு நாடுகளுக்கு இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வரும் நிலையில், நேற்று முன் தினம் உக்ரைன் எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில், ரஷ்யாவின் துலா பகுதியில் உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்தசூழலில் தான், இத்தாக்குதலுக்கு அடுத்த நாளே ரஷ்யா, மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை உக்ரைன் மீது நடத்தியிருக்கிறது. இரவோடு இரவாக, தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ், டினிப்ரோ பிராந்தியங்களில் நடப்பட்ட தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் உக்ரைனிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யா 70 ஏவுகணைகளையும் 611 ட்ரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் அதேவேளையில் உக்ரைனிய வான் பாதுகாப்புப் பிரிவுகள் 50 ஏவுகணைகளையும் 582 ஆளில்லா விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைனியவிமானப்படை தெரிவித்துள்ளது.
அதேபோல ரஷ்யாவில் தாக்குதலில், கீவில் அமைந்துள்ள 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா பேராலயம் தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளது. உலகின் முக்கிய கிறிஸ்தவ மற்றும் கலாசார அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த வளாகம், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, "கிறிஸ்தவ கலாசாரத்திற்கு எதிரான மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று" எனக் கண்டித்துள்ளார். அதேசமயம், பிரான்சில் உச்சிமாநாட்டிற்காகக் கூடும் ஜி7 தலைவர்கள், இந்தத் தாக்குதல்களுக்கு "தீர்க்கமான மற்றும் உறுதியான" பதிலடி கொடுக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதற்கிடையில், யுனெஸ்கோ பாரம்பரிய தளம் சேதமடைந்ததற்கு தாங்கள் காரணமல்ல என்றும், உக்ரைனின் அமெரிக்க தயாரிப்பு பேட்ரியட் வான் பாதுகாப்பு ஏவுகணை தவறுதலாக தாக்கியதால்தான் சேதம் ஏற்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விளக்கத்தை உக்ரைன் நிராகரித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்துவந்த ஈரான் - அமெரிக்கா மோதல் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தொடர்வது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

