ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி எங்கே? ரஷ்ய தூதர் சொன்ன தகவல்!
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்டதையடுத்து, அவரது மகன் மொஜ்தபா கமெனி உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் பொதுவெளியில் தோன்றாததால் உடல்நிலை, இருப்பிடம் குறித்த வதந்திகள் பரவின.
பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலைத் தொடங்கின. இந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா கமெனி கொல்லப்பட்டார். இதனால் போர் உக்கிரமடைந்தது. இந்தப் போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள சூழலில், மத்திய கிழக்கில் நொடிக்குநொடி பதற்றம் நீடித்து வருகிறது. உலகின் மிக முக்கியமான எண்ணெய்ப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை முழுமையாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதனால் சர்வதேச அளவில் எரிபொருள் முதல் பொருளாதாரம் வரை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இதற்கிடையே, ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா கமெனி கொல்லப்பட்ட பிறகு அவரின் மகன் மொஜ்தபா கமெனி ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. அதன்பிறகு அவர் வெளியிட்ட பல அறிக்கைகள் தேசிய தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டன. ஆனால், அவர் ஊடகங்களில் தோன்றாதது, அவரது உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்த வதந்திகளுக்கு வழிவகுத்தது.
இந்நிலையில் இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மொஜ்தபா கமெனி ஈரானில்தான் இருக்கிறார் என்று ஒரு ரஷ்ய தூதர் கூறியுள்ளார். ’’உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஈரானில்தான் இருக்கிறார், ஆனால் சில காரணங்களுக்காக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வருகிறார்’’ என்று ஈரானுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸி டெடோவ், RTVI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
பதவியேற்ற சில நாட்களிலேயே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மொஜ்தபா கமெனி காயமடைந்துள்ளதாகவும், அவரது முகம் சிதைந்திருக்கக்கூடும் என்றும் நம்புவதாக அமெரிக்கா கூறியது.
மற்றொரு ஊடகம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பின் பேரில், மொஜ்தபா கமெனி சிகிச்சைக்காக மாஸ்கோவிற்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்திருந்தது.
இப்படி, ஈரானின் புதிய தலைவர் குறித்த தகவல்கள் பொது வெளியில் இல்லாதது, போர்க்காலத்தில் நாட்டை உண்மையில் யார் நடத்துகிறார்கள் என்ற ஆழமான கேள்வியை எழுப்பியிருந்தது.
இந்த நிலையில், ஈரானில் மொஜ்தபா இருக்கிறார் என்பது குறித்த மாஸ்கோவின் அறிக்கை நம்பகத்தன்மையுடன் இருக்கிறது. ரஷ்யாவும் ஈரானும் நெருங்கிய தூதரக உறவுகளைப் பேணி வருகின்றன. மேலும் கடந்த ஆண்டு இரு நாடுகளும் ஒரு முக்கிய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்குப் பதிலடியாக, வளைகுடா முழுவதும் உள்ள எதிரி இலக்குகள் மீது ஈரான் எதிர்த்தாக்குதல்களை நடத்த வரும் நேரத்தில், ரஷ்ய தூதரின் இந்த அறிவிப்பு ஓர் எழுச்சி முழக்கமாக மாறியுள்ளது.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக, 56 வயதான மொஜ்தபா கமெனி, தன் தந்தையின் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலும் திரைக்குப் பின்னாலும், செல்வாக்கு செலுத்தியும், ஆனால் பொதுவெளியில் அரிதாகவே தோன்றி வந்தார். தற்போது ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ள போதும் அவர் மறைவாகவே இருப்பது இஸ்லாமியக் குடியரசில் அதிகாரத்தின் மாறிவரும் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அங்கு உச்சத்தில் இருக்கும் தனிநபரைவிட நிறுவனங்களும் பாதுகாப்பு அமைப்புகளுமே அதிக முக்கியத்துவம் பெறக்கூடும் என்றும் சிஎன்என் அறிக்கை ஒன்று கூறுகிறது .

