ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா 'சஸ்பெண்ட்'

ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா 'சஸ்பெண்ட்'
ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா 'சஸ்பெண்ட்'

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா நடுநிலை வகித்தது.

உக்ரைனில் ரஷ்ய படைகள் பொது மக்களை தாக்கிக்கொன்று வருவதாகவும் எனவே அந்நாட்டை மனித உரிமை கவுன்சிலில் இருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. இதன் மீது வாக்கெடுப்பு நடந்த நிலையில் 93 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. 24 நாடுகள் எதிராக வாக்களித்தன. இதன் மூலம் இத்தீர்மானம் நிறைவேறியது. இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட 58 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் ஐநாவில் கொண்டு வரப்பட்ட 8 தீர்மானங்களிலும் இந்தியா எந்த தரப்புக்கும் ஆதரவாக வாக்களிக்காமல் நடுநிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. அப்பாவிகளை கொல்வது மூலமும் ரத்தத்தை சிந்துவது மூலமும் உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண முடியாது என்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே இதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் ஐநாவிற்கான இந்திய தூதர் டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்தார்.

இந்தியா எப்போதும் அமைதிக்கு ஆதரவாகவே முடிவெடுக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார். இதற்கிடையில் தாங்கள் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது ரஷ்யாவிற்கு உலக நாடுகள் விடுத்துள்ள தெளிவான செய்தி என அமெரிக்கா கூறியுள்ளது. உக்ரைனில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு ரஷ்யாவே பொறுப்பு என உலக நாடுகள் தெரிவித்துள்ளதாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்டு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com