நான்கு ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியது ரஷ்யா
கடல் பகுதியில் நடந்த இந்தச் சோதனை தொடர்பான காணொலி காட்சிகளை ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ளது.
போரெய் நீர்மூழ்கி கப்பலில் இருந்து அடுத்தடுத்து நான்கு ஏவுகணைகள் ஏவப்பட்டு சோதிக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வெண் புகையை வெளியேற்றிபடி நான்கு ஏவுகணைகளும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சீறிப் பாய்ந்து இலக்கை தாக்கியதாக ரஷ்ய ராணுவத்தினர் தெரிவித்தனர். ரஷ்யாவிடம் இது போன்று மூன்று நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. நான்காவதாக யாஸ் விளாடிமிர் என்ற கப்பல் மேம்படுத்தப்பட்டு, முன்னோட்டமாக இயக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நீர்மூழ்கிக் கப்பல்களில் சுமார் 16 ஏவுகணைகளை எடுத்துச் செல்ல முடியும். மேலும் அந்த ஏவுகணைகள் அனைத்தும் அணு ஆயுதங்களை சுமந்தபடி சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக் கூடிய திறன் படைத்தவை என கூறப்படுகிறது. பனிப்போர் காலத்துக்குப் பிறகு நடத்தப்பட்டிருக்கும் ஆற்றல்மிக்க சோதனையாக இது கருதப்படுகிறது.