எரிபொருள் கொடுக்க மறுக்கும் நார்வே - நடுக்கடலில் சிக்கி தவிக்கும் ரஷ்ய பணக்காரரின் கப்பல்!
ரஷ்ய அதிபர் புதினின் நண்பர் விளாடிமிர் ஸ்ட்ரசல்கோவ்ஸ்கிக்கு சொந்தமான சூப்பர் கப்பல் ஒன்று நார்வேயில் எரிபொருள் நிரப்ப வழியில்லாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக சிக்கியுள்ளது.
விளாடிமிர் ஸ்ட்ரசல்கோவ்ஸ்கி ரஷ்யாவின் உளவு அமைப்பான கேஜிபியின் முன்னாள் முகவர். ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர். ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் இவரும் ஒருவர். இவருக்கு சொந்தமான சூப்பர் கப்பல் ஒன்று நார்வேயில் சிக்கியுள்ளது. பழுது ஏற்பட்டு அது சிக்கவில்லை! எரிபொருள் நிரப்ப வழியில்லாமல் சிக்கியுள்ளது.
இந்த கப்பல் பிப்ரவரி 15 முதல் நார்விக் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட குழு இந்த கப்பலை இயக்கி வந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா அதிரடியாக போர் தொடுத்ததால், இந்த கப்பலுக்கு நார்வேயில் எரிபொருள் தர மறுப்பதாக கப்பலின் கேப்டன் குற்றம்சாட்டியுள்ளார்.
"எங்களுக்கு எதிரான பாகுபாட்டை நாங்கள் காண்கிறோம். இது மிகவும் அநியாயம். எங்கள் குழுவில் யாரும் ரஷ்யர்கள் இல்லை. நாங்கள் 16 பேர் கொண்ட மேற்கத்திய குழுவினர். எங்களுக்கு உரிமையாளருடன் எந்த தொடர்பும் இல்லை." என்று படகின் கேப்டன் ராபர்ட் லங்கெஸ்டர் கூறினார்.
விளாடிமிர் ஸ்ட்ரசல்கோவ்ஸ்கி ஐரோப்பாவால் தடை செய்யப்பட்ட நபர்கள் பட்டியலில் இல்லை. இருந்தபோதும் அவரது சூப்பர் கப்பலுக்கு எரிபொருள் நிரப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் எரிபொருள் சப்ளையர்கள் ரஷ்யாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு உதவ விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். கப்பலில் எரிபொருள் நிரப்ப முடியாமலும், கப்பலை அப்படியே விட்டுச் செல்ல முடியாமலும் அந்தக் குழு தவித்து வருகிறது.