ரஷ்யாவில் அக்டோபர் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி: அரசு தீவிரம்!
ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி சோதனை முடிந்ததால் அதனை அக்டோபர் மாதம் முதல் பொதுமக்களுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,78,55,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,84,811 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,45,443 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 95 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 14,058 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,114 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 6,46,524 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,84,861 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளன என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் " கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவடைந்துவிட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன".
மேலும் " அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்த திட்டமிட்டிருக்கிறோம். கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை அக்டோபரில் போட திட்டமிடுகிறோம்" என்றார் மிக்கேல் முராஷ்கோ.

