சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு குட் பை சொல்லும் ரஷ்யா! சொந்தமாக நிறுவ திட்டம்!
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு குட் பை சொல்லும் ரஷ்யா! சொந்தமாக விண்வெளி நிலையத்தை நிறுவ திட்டம்!
பூமிக்கு மேலே சுமார் 250 மைல் தொலைவில் அமைந்துள்ளது சர்வதேச விண்வெளி நிலையம். பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக பணி செய்யும் இடம். கடந்த 1998 முதல் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் 16 நாடுகள் கூட்டாக இங்கு விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தான் தனக்கும் இந்த நிலையத்திற்குமான உறவை முறித்துக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அதன்படி தனக்கென சொந்தமாக 6 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் விண்வெளி நிலையத்தை அமைக்க திட்டம் வைத்துள்ளதாம் ரஷ்யா.
பொது வெளியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கும் இடையே கசப்பான உறவு நீடித்து வந்தாலும் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரு நாடுகளும் கூட்டாக வேலை செய்து வருகின்றன. இந்நிலையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளது ரஷ்யா. இதனை ரஷ்ய நாட்டின் மத்திய விண்வெளி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
“எங்களது திட்டத்தின்படி அனைத்தும் சரியாக நடந்து அதிபர் புதின் அவர்களும் இதற்கு பச்சைக்கொடி காட்டினால் 2030 வாக்கில் புவி வட்டப்பாதையில் எங்களுக்கென ஒரு விண்வெளி நிலையம் நிறுவப்படும்” என உறுதியாக தெரிவித்துள்ளது அந்நிறுவனம். வழக்கமாக நிலப் பகுதிகளை கைபற்றி அங்கிருக்கும் வளங்களை சுரண்ட தான் நாடுகளுக்கு இடையே போர் நடந்தது. இப்போது அதனை விண்வெளிக்கும் கொண்டு சென்றுள்ளார்கள்.

