படைகளை குவிக்கும் ரஷ்யா... பின்வாங்கும் அமெரிக்கா... மூளுகிறதா உக்ரைன் போர்?

படைகளை குவிக்கும் ரஷ்யா... பின்வாங்கும் அமெரிக்கா... மூளுகிறதா உக்ரைன் போர்?

படைகளை குவிக்கும் ரஷ்யா... பின்வாங்கும் அமெரிக்கா... மூளுகிறதா உக்ரைன் போர்?
Published on

உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸில் தனது ஆயிரக்கணக்கான படை வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்து ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட தொடங்கியிருப்பது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளை கலக்கமடையச் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டதால், உக்ரைனை இனி ரஷ்யா சீண்டாது என கருதப்பட்டு வந்த சூழலில், ரஷ்யாவின் இந்த அதிரடி நடவடிக்கையை யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஒன்றுபட்ட சோவியத் யூனியன் 1991-இல் உடைந்தபோது, அதில் ஓர் அங்கமாக இருந்த உக்ரைன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. இது, உக்ரைன் தனக்கு செய்த மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் எனக் கருதிய ரஷ்யா, அன்று முதல் உக்ரைனை துண்டாடுவதை தனது அரசியல் கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டது.

அதன்படி, 2008-இல் ஜார்ஜியா, 2014-இல் கிரீமியா என அடுத்தடுத்து உக்ரைனின் பகுதிகளை பிரித்த ரஷ்யா, தற்போது முழு உக்ரைனையும் ஆக்கிரமித்து தன்வசமாக்கிக் கொள்ள எத்தனித்து வருகிறது. ஆனால், ஜார்ஜியா, கிரீமியாவை பிரிக்கும்போது அலட்சியம் காட்டியதை போல, இந்த முறை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பாரா முகம் காட்டவில்லை.

ஆரம்பம் முதலாகவே, உக்ரைனை ஆக்கிரமிக்கும் ரஷ்யாவின் முயற்சிக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்தால் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா பகிரங்கமாகவே அறிவித்தது. அமெரிக்காவின் இந்த போர் பிரகடனத்தை ரஷ்யா மட்டுமல்ல, உக்ரைனும், ஐரோப்பிய நாடுகளுமே கூட எதிர்பார்க்கவில்லை. அமெரிக்காவின் துணையை, தனக்கு மிகப்பெரிய பக்கபலமாக நினைத்த உக்ரைனும், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினை கடுமையாக விமர்சித்து வந்தது.

தொடக்கத்தில், உக்ரைனை முழுவதுமாக ஆக்கிரமிக்க வேண்டும் என்பது ரஷ்யாவின் எண்ணமாக இருக்கவில்லை. சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை அதிகரிப்பதும், ஐரோப்பிய நாடுகளின் கை ஓங்கி வருவதும், ரஷ்யாவை போர் நடத்தும் மனநிலையில் இருந்து முதலில் விலக்கியே வைத்தது. உக்ரைனை பணியச் செய்து, ஜார்ஜியா, பெலாரஸை போல தங்களின் மறைமுக அரசியல் காலனி நாடாக அதை மாற்றுவதே ரஷ்யாவின் பிரதான நோக்கமாக இருந்தது. ஆனால், அமெரிக்காவின் வெளிப்படையான போர் பிரகடனமும், அதன் தொடர்ச்சியாக உக்ரைன் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளுமே ரஷ்யாவை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.

அதுமட்டுமின்றி, தன்னிகரற்ற வல்லரசு நாடாக தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கும் ரஷ்யா, அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தால், அது சர்வதேச அளவில் அதன் மரியாதையை குறைத்துவிடும் என எண்ணிய விளாடிமிர் புதின், ஒருபோதும் அப்படியொரு சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அனைத்தையும் விட மேலாக, நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் கூட்டணி அமைத்துவிடக் கூடாது என்பதும் ரஷ்யாவின் முக்கிய கவலையாக இருக்கிறது.

இவ்வாறு அடுத்தடுத்து நடந்த அரசியல் காய் நகர்த்தலுக்கு பிறகே, தற்போது உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸில் ஆயிரக்கணக்கான படைகளையும், ஆயுதங்களையும் குவித்து போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது ரஷ்யா. அதேபோல, உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், எப்போது வேண்டுமானாலும் உக்ரைனில் போர் வெடிக்கும் என்கின்ற சூழல் உருவாகியுள்ளது.

ரஷ்யாவின் இந்த அதிரடி முடிவை எதிர்பார்க்காத அமெரிக்கா, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறது. ஏற்கனவே பல உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு கோடிக்கணக்கான டாலர்களை இழந்து நிற்கும் அமெரிக்கா, ரஷ்யா போன்றதொரு ராணுவ வலிமை மிக்க நாட்டுடன் உடனடியாக மோதும் என யாராலும் தீர்க்கமாக கூறிவிட முடியாது. இதனை உணர்ந்ததால் தான், உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்களை உடனடியாக தாய்நாடு திரும்புமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார் அதிபர் ஜோ பைடன். அதே சமயத்தில், ரஷ்யாவுடன் மோதுவதை தவிர்த்து, உக்ரைனை ஆக்கிரமிக்க அனுமதித்தால், அது அமெரிக்காவுக்கு காலத்துக்கும் அழிக்க முடியாத களங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதையும் ஜோ பைடன் உணராமல் இருக்க மாட்டார்.

உக்ரைன் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்படுமா...? இல்லை, போர்புரிந்து உக்ரைனை அமெரிக்கா மீட்குமா...? இந்த இரண்டும் இல்லாமல், தனது வல்லமையை நிரூபிக்க உக்ரைனை வைத்து வல்லரசு நாடுகள் ஆடி வரும் ஆட்டமா இது...? இவையனைத்துக்கும் இன்னும் சிறிது நாட்களில் விடை தெரிந்துவிடும். எது எப்படியோ.. இதில் எது நடந்தாலும், இனி அமெரிக்கா அல்லது ரஷ்யாவின் கைப்பாவையாக தான் உக்ரைன் இருக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி. பாவம். உக்ரைன் மக்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com