ஆப்கான் | தாலிபான் ஆட்சியை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த ரஷ்யா!
செய்தியாளர்: ஜி.எஸ்.பாலமுருகன்
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதையடுத்து, 2021 ஆகஸ்டில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றியது. அதன் பிறகு உலக நாடுகள் தாலிபான் அரசை அங்கீகரிக்க தயங்கினாலும், தற்போது ரஷ்யா அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், தாலிபானின் தற்போதைய ஆட்சியை அங்கீகரிக்கும் முதல் நாடாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலையை ரஷ்யா பெற்றுள்ளது.
ரஷ்யாவின் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவுக்கான ஆப்கானிஸ்தானின் புதிய தூதர் GUL HASSAN-ஐ ஏற்றுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, வணிகம், போக்குவரத்து, எரிசக்தி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ரஷ்ய உச்ச நீதிமன்றம், தாலிபானை தீவிரவாத அமைப்பு பட்டியலில் இருந்து அகற்றியது. அந்தத் தீர்ப்புக்குப் பிறகு இப்போது அதிகாரபூர்வ அங்கீகாரம் வந்துள்ளதால், ரஷ்யா - தாலிபான் உறவு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
அங்கீகாரம் கொடுத்ததன் மூலம், ஆப்கானில் ஐஎஸ்ஐஎஸ் போன்ற இயக்கங்களைத் தாலிபான் கட்டுப்படுத்தும் வகையில் தீவிரவாத தடுப்பு ஒத்துழைப்பை ரஷ்யா விரும்புவதாகவும் கூறப்படுகிறது. பெண்கள் உரிமை, கல்வி, மக்களாட்சியின் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் தாலிபான் அரசை அங்கீகரிக்க மேற்கத்திய நாடுகள் குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்றவை மறுத்து வருகின்றன.
ரஷ்யாவின் அங்கீகாரம் தெற்காசியாவிலும் மத்திய ஆசியாவிலும் ராணுவ மற்றும் அரசியலில் புதிய நிலைகளை உருவாக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது. இது வரலாற்று தருணம், மற்ற நாடுகளும் இதைப் பின்பற்ற வேண்டும் என ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது. ரஷ்யாவின் காய்நகர்த்தல்களை இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் மிக கவனமாகப் பார்க்கின்றன.