புதினை கொல்ல முயற்சியா? ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு!

ட்ரோன் மூலமாக அதிபர் விளாடிமிர் புதினை உக்ரைன் கொல்ல முயன்றதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
புதின், ஜெலோன்ஸ்கி
புதின், ஜெலோன்ஸ்கிTwitter image

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர் ஓர் ஆண்டைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ட்ரோன் மூலமாக அதிபர் விளாடிமிர் புதினை உக்ரைன் கொல்ல முயன்றிருப்பதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இல்லமான கிரெம்ளின் கட்டடத்தின் மீது ஆளில்லா விமானம் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், கிரெம்ளின் கட்டடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்வது தெரிகிறது. அதாவது, கிரெம்ளின் குவிமாடத்தின் மீது ட்ரோன் வெடிகுண்டை வெடிக்கச் செய்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ. (RIA), ”ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைக் கொல்லும் முயற்சியில் ஒரே இரவில் கிரெம்ளின் மீது ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் அது தோல்வியடைந்துள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த இரண்டும் ரஷ்ய பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் புதினுக்கு காயம் ஏற்படவில்லை. கிரெம்ளின் கட்டடத்துக்கும் சேதம் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாத செயல், இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். வெற்றி தினமான மே 9 அணிவகுப்புக்கு முன்னதாக அதிபரை படுகொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com