சித்திரவதை செய்து கொல்லப்படும் ரோஹிங்யா மக்கள்

சித்திரவதை செய்து கொல்லப்படும் ரோஹிங்யா மக்கள்

சித்திரவதை செய்து கொல்லப்படும் ரோஹிங்யா மக்கள்
Published on

மியான்மரில் நீண்ட காலமாக சித்திரவதைக்குள்ளாகும் இனக்குழு ரோஹிங்யா. மியான்மர் பாதுகாப்புப் படைகளும், சில பௌத்த மதக் குழுக்களும் ரோஹிங்யா மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ராணுவ ஆட்சியிலிருந்து படிப்படியாக மீண்டு ஜனநாயக ஆட்சிக்குத் திரும்பியிருக்கும் மியான்மரின் மேற்கு எல்லையோரத்தில் அமைந்திருக்கும் மாநிலம் ராகினே எனப்படும் அராக்கன். பௌத்தர்கள் பெருமளவில் வசிக்கும் இந்தப் பகுதியில், ரோஹிங்யா என்ற இனத்தவரும் கணிசமாக வாழ்கின்றனர். 1948 ஆம் ஆண்டு பர்மா விடுதலை பெற்ற பிறகும், 1971-இல் வங்கதேச விடுதலைப் போர் நடந்தபோதும், ராகினே பிராந்தியத்தில் குடியேறியவர்கள் இவர்கள். இவர்கள் அனைவரும் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள்.

2013 ஆம் ஆண்டுக் கணக்குப்படி மியான்மரில் வசிக்கும் ரோஹிங்யா மக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சுமார் 12 லட்சம். இங்கு நீண்ட காலமாகவே புகைந்து வரும் இனச்சண்டை, கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமடைந்திருக்கிறது. மியான்மர் பாதுகாப்புப் படைகளும், சில பௌத்த மதக் குழுக்களும் ரோஹிங்யா மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், சித்திரவதை, கொத்தடிமை முறை என பல வழிகளிலும் ரோஹிங்யா மக்களுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இது போன்ற சித்திரவதைகளுக்கு பச்சிளம் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் கூட விதிவிலக்கில்லை.

ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த மக்கள் வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர். வங்கதேசத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் மியான்மர் அகதிகள் இருக்கின்றனர். இதுவரை சுமார் 3 லட்சம் பேர் மியான்மரிலிருந்து வெளியேறிவிட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

அகதிகளாகச் சென்றவர்கள் அனைவருக்கும் பிற நாடுகளில் இடம் கிடைத்துவிடவில்லை. இடம் கிடைத்தவர்களுக்கு உணவும், உரிய மருத்துவ வசதியும் கூட கிடைக்கவில்லை. பெண்கள், குழந்தைகள் உள்பட படகில் தப்பிச் சென்ற பலர், நடுக்கடலில் மூழ்கி இறந்துபோனதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மியான்மருடன் முடிந்துவிடக்கூடிய சிறிய பிரச்னையல்ல. ரோஹிங்யா இனத்தவர் மீதான தாக்குதலைக் கண்டித்து வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்துகின்றன. ஆயினும் இன்றுவரை ரோஹிங்யா மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறையவில்லை. உலகத்திலேயே மிக அதிகமாக சித்திரவதைப்படுத்தப்படும் இனக்குழு இதுதான் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com