கண்ணீர் விட்டு அழுத டெலிவரி செய்யும் நபர் : மனம் மாறிய திருடர்கள்... நடந்தது என்ன?
பாகிஸ்தானில் டெலிவரி செய்யும் நபரிடம் வழிப்பறி செய்த திருடர்கள், அவர் கண்ணீர் விட்டு அழுததும் மனம் திருந்தி பொருட்களை திரும்ப கொடுத்துவிட்டு ஆறுதல் சொல்லிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானில் கராய்ச்சி எனும் இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த வீடியோ அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், டெலிவரி செய்யும் நபர் தனது இருச்சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு வீட்டில் டெலிவரி செய்து விட்டு திரும்புகிறார். அப்போது இருசக்கர வாகனத்தில் வரும் இருவர், டெலிவரி செய்யும் நபரின் அருகே வாகனத்தை நிறுத்துகின்றனர்.
ஒருவர் வாகனத்தில் இருக்க மற்றொருவர் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக்கொண்டு டெலிவரி செய்யும் நபரிடம் கத்தியை காட்டி மிரட்டுகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த டெலிவரி செய்யும் நபர் தன்னிடம் இருந்த பொருட்களை கொடுத்துவிட்டு அழுகிறார்.
இதனால் மனம் மாறிய திருடர்கள் அவரிடம் பொருட்களை திரும்ப கொடுத்துவிட்டு கட்டியணைத்து ஆறுதல் சொல்லிவிட்டு செல்கின்றனர். இந்த வீடியோ மக்களைப் பிரமிக்க வைத்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடைமுறையில் உள்ள கொரோனா நிலைமை கொள்ளையர்களை அத்தகைய நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் இன்னும் அவர்களுக்குள் மனிதநேயம் இருக்கிறது என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

