இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கு நேரடியாக சென்றிருந்தார். அங்கே அவர், “யூதர்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது என்பதை உலகுக்கு காட்டுவதற்காக இஸ்ரேல் வந்தேன்” என கூறி இருந்தார். முன்னதாக இஸ்ரேல் சென்றடைந்த பைடனை, Ben Gurion விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்டித்தழுவி வரவேற்பு தெரிவித்திருந்தார்.
பின்னர் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்புக்குப்பின், “காஸா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் ராணுவம் அல்ல” என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
தொடர்ந்து டெல் அவிவ் நகரில் உரையாற்றிய அவர், “பாலஸ்தீனியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். காஸா மற்றும் மேற்குக் கரை பகுதியில் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளைச் செய்ய அமெரிக்கா 832 கோடி ரூபாயை வழங்க உள்ளது. காஸா மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்கள் எகிப்தில் இருந்து செல்வதற்கு இஸ்ரேலிய நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த உதவிப் பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில் இந்த உதவிப் பொருள்களை ஹமாஸ் அமைப்பினர் தடுத்தால் அவர்களுக்கு பொதுமக்கள் குறித்த எவ்வித அக்கறையும் இல்லை என்பது உலகிற்கு தெளிவாகும்” என தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் இஸ்ரேல் சென்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து ஆதரவு தெரிவிக்க இருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உருவாக பிரிட்டனும் ஒரு காரணம் என்பதால் பிரிட்டனுக்கும் இஸ்ரேலுக்குமான உறவு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.