அமெரிக்க பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு: ஒரு மாணவர் பலி; 3 பேர் படுகாயம்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணாக்கர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
வாஷிங்டனின் ஸ்போகென் பகுதியில் இயங்கி வரும் உயர்நிலை பள்ளியில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. முதலில் ஒரு வகுப்பறைக்குள் புகுந்த அந்த மாணவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட முயன்றார். ஆனால் அந்த துப்பாக்கி சரியாக இயங்காததால், மற்றொரு துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டார். இதில் ஒரு மாணாக்கர் உயிரிழந்ததை அடுத்து அங்கிருந்த மாணவர்கள் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினர். இதற்கிடையே தாக்குதல் நடத்திய மாணவரிடம் இருந்து சக மாணவர்கள் துப்பாக்கியை பறிக்க முயன்றனர். அப்போது துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் வெடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்குள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த மாணவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
தாக்குதல் நடத்திய அந்த மாணவர் யார்? ஏன் தாக்குதல் நடத்தினார்? என்ற விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. படுகாயமடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.