போட்டோவா இது? அவமதித்த மணப்பெண்! அபராதம் விதித்த நீதிமன்றம்
சமூக வலைதளத்தில் திருமண புகைப்படக்காரர் குறித்து அவதூறாக பேசிய பெண்ணிற்கு 1.15 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கனடாவை சேர்ந்தவர் எமிலி லியாவ். இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. திருமணத்திற்காக எமிலி அப்பகுதியில் உள்ள ஒரு புகைப்பட நிறுவனத்தை அணுகியுள்ளார். தனது திருமணம் வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் எடுக்க அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். அவர்களும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்தனர். இந்நிலையில் எமிலி அந்நிறுவனத்திற்கு தான் அளித்த முன்பணம் தவிர இதர தொகைகளை வழங்க மறுத்துவிட்டார். இதுகுறித்து கேட்டபோது, ’புகைப்படங்கள் சரியில்லை, எனக்கு அதில் திருப்தியில்லை’ என பல்வேறு காரணங்கள் கூறி வந்தார்.
புகைப்பட நிறுவனம் தொடர்ந்து பணம் கேட்டு அழுத்தம் தர, அந்நிறுவனம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசினார். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தில் அந்நிறுவனம் குறித்தும் அவர்கள் எடுத்த புகைப்படங்கள் குறித்தும் புகார்களை தெரிவித்தார். இதனால் அந்நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இதனால் அந்நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எமிலி தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அந்த புகைப்படங்கள் இல்லை என்பதை நிரூபிக்க தவறிவிட்டார். சமூக வலைதளத்தில் புகைப்படக்காரர் குறித்து அவதூறாக பேசிய அவருக்கு 1.15லட்சம் டாலர்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.