Revival of Raketa Watch Company in Russia
Raketa watches web

ரஷ்யாவின் கௌரவச் சின்னமான ‘ரகெட்டா’.. பழமை மாறாத புதுமை.. புடின் விரும்பும் கடிகாரம்!

கடிகாரத் துறையில் சுவிட்சர்லாந்துக்கு சவால் விடும் வகையில் வளர்ச்சியைக் கண்டுள்ளது ரஷ்யாவின் ரகெட்டா (Raketa) நிறுவனம். திவால் நிலையில் இருந்து தற்போது கடிகாரத் துறையில் மறுமலர்ச்சியை உருவாக்கியுள்ள ரகெட்டா நிறுவனத்தைப் பற்றிய தொகுப்பைப் பார்க்கலாம்.
Published on

ஒருகாலத்தில் 7 ஆயிரம் தொழிலாளர்களுடன் விண்வெளி வீரர்களுக்காகக் கடிகாரம் தயாரித்த ரகெட்டா நிறுவனம், சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போதுதான் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் நிகழ்ந்தது. கடிகாரத் துறையே தெரியாத டேவிட் ஹெண்டர்சன்- ஸ்டீவர்ட் என்ற பிரிட்டிஷ் வழக்கறிஞர், இந்த நிறுவனத்தின் பழைய வடிவமைப்புகள் மீது கொண்ட காதலால் 2010இல் தன் வசமாக்கினார்.

Raketa
Raketaweb

86 வயதான தலைமைப் பொறியாளர் லுட்மிலா வோய்னிக் பாதுகாத்து வைத்த பழைய வரைபடங்களைக்கொண்டு, இடமிருந்து வலமாக சுற்றும் விசித்திரமான கடிகாரங்களை உருவாக்கி உலகை ஆச்சரியமடையச் செய்தார், ஹெண்டர்சன்-ஸ்டீவர்ட். கடும் தொழில் போட்டி, நெருக்கடிகளுக்கு மத்தியில் பல வளர்ச்சிகளைக் கண்ட ரகெட்டா நிறுவனம், லாபங்களை மட்டுமே சம்பாதித்தது.

ரகெட்டா நிறுவனம் கூடுதல் கவனம் பெறுவதற்கு மேலும் ஒரு காரணமாக அமைந்தவர், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின். அவர் அந்த நிறுவனத்தின் இம்பீரியல் பீட்டர்ஹோஃப் ரகக் கடிகாரத்தை அணியத் தொடங்கியதும், அதன் டிமாண்ட் எகிறியது. போர் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், மேற்கத்திய நாடுகளை எதிர்பார்க்காமல் ஸ்பிரிங் முதல் சக்கரம் வரை அனைத்து உதிரிபாகங்களையும் இவர்களே சொந்தமாகவே தயாரிப்பதும், ரகெட்டா கடிகாரத்தின் சிறப்பம்சமாக இருக்கிறது.

Putin wearing a Russian made Imperial Peterhof Factory (Raketa) watch
Putin wearing a Russian made Imperial Peterhof Factory (Raketa) watchX

தனித்துவமான வடிவமைப்பு, மக்களைக் கவரும் அம்சங்களைக் கொண்ட இந்த நிறுவனத்தின் கடிகாரங்கள், இந்திய மதிப்பில், 60 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 3 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ’மேட் இன் ரஷ்யா’ என்ற அடையாளத்தோடு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சந்தைகளை இந்த வின்டேஜ் கடிகாரங்கள் தற்போது ஆக்கிரமித்து வருகின்றன. பழைய இயந்திரங்கள், அனுபவம் வாய்ந்த கைவினைஞர்கள் மற்றும் நவீன மார்க்கெட்டிங் என ரகெட்டா நிறுவனம் தற்போது ரஷ்யாவின் கவுரவச் சின்னமாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com