’ஆஸ்திரேலியாதான் என் தாய்நாடு’: மெல்போர்னில் பஹ்ரைன் கால்பந்து வீரர் பரபரப்பு!

’ஆஸ்திரேலியாதான் என் தாய்நாடு’: மெல்போர்னில் பஹ்ரைன் கால்பந்து வீரர் பரபரப்பு!

’ஆஸ்திரேலியாதான் என் தாய்நாடு’: மெல்போர்னில் பஹ்ரைன் கால்பந்து வீரர் பரபரப்பு!
Published on

தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த பஹ்ரைன் கால்பந்துவீரர், ஆஸ்திரேலியாவுக்கு இன்று திரும்பினார். 

பஹ்ரைனைச் சேர்ந்த கால்பந்து வீரர், ஹக்கிம் அல் அரைபி (Hakeem Al Araibi). வயது 25. அரபு வசந்தம் என்ற பெயரில் அரசுக்கு எதிராக அரபு நாடுகளில், கடந்த 2011 ஆம் நடந்த போரட்டத்தில் இவர் கலந்துகொண்டதாகவும் அப்போது பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் இவரை பஹ்ரைன் அரசு விசாரித்து வந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பஹ்ரைனில் இருந்து தப்பி, ஆஸ்திரேலியா சென்றார். அங்கு அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப் பட்டது. அங்கு மெல்போர்னில் வசித்து வரும் அவர், அங்குள்ள கால்பந்து கிளப் ஒன்றுக்காக விளையாடி வருகிறார். இவர், கடந்த நவம்பர் மாதம் தனது இளம் மனைவியுடன் ஹனிமூன் கொண்டாட, தாய்லாந்து சென்றார்.

இதை மோப்பம் பிடித்த பஹ்ரைன், ஹக்கீமை தாய்லாந்தில் கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடியது. பின்னர் தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை, தங்கள் நாட்டுக்கு நாடு கடத்த பஹ்ரைன் கோரிக்கை விடுத்தது.

தான், பஹ்ரைனுக்கு நாடு கடத்தப்பட்டால், சித்திரவதை செய்யப்படலாம் என்றும் தன்னை அங்கு அனுப்ப வேண்டாம் என்றும் ஹக்கீம் கோரிக்கை வைத்தார். இதனால் தாய்லாந்து அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். 

இதற்கிடையே, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஹக்கீமை விடுதலை செய்து, ஆஸ்திரேலியாவுக்கே திரும்ப அனுப்ப வேண்டும் என்று தாய்லாந்து அரசுக்கு இரண்டு முறை கடிதம் எழுதினார். அதோடு ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மரைஸ் பெய்ன், தாய்லாந்துக்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டார். 

இந்த அழுத்தம் காரணமாக, ஹக்கீமை தாய்லாந்து அரசு நேற்று விடுதலை செய்தது. தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் அவர் இன்று ஆஸ்திரேலியா திரும்பினார். மெல்போர்ன் விமான நிலையத்தில் அவரை நூற்றுக்கணக்கானோர் வரவேற்றனர்.

அங்கு அவர் கூறும்போது, ‘’எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஆஸ்திரேலியாதான் எனது தாய் நாடு. எனக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்றாலும் எனது நாடு இதுதான். ஆஸ்திரேலியாவைதான் விரும்புகிறேன். இந்த மண்ணில்தான் நான் இறப்பேன்’’ என்று ஆவேசமாகக் கூறினார்.

ஜனவரி மாதம் சவுதி அரேபியாவில் இருந்து, 18 வயது இளம் பெண், ரஹஃப் முகமது அல்குனம், தாய்லாந்துக்கு தப்பி வந்தார். அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரி செல்ல முயன்றார். அவரை கைது செய்த தாய்லாந்து அரசு, பின்னர் கனடாவுக்கு அகதியாக அவரை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com