உக்ரைனை ரஷ்யா தாக்க என்ன காரணம்? - ஒரு அலசல்

உக்ரைனை ரஷ்யா தாக்க என்ன காரணம்? - ஒரு அலசல்
உக்ரைனை ரஷ்யா தாக்க என்ன காரணம்? - ஒரு அலசல்

உக்ரைனை உக்கிரமாக ரஷ்யா தாக்கி வருவதற்கு அதன் கருங்கடல் கனவுதான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

உக்ரைனுடன் ரஷ்யாவின் போர் வேண்டுமானால் அண்மைக்கால திட்டமாக இருக்கலாம். ஆனால், கருங்கடல் பகுதியில் யாரையும் கோலோச்ச விடாமல் தடுக்கும் ரஷ்யாவின் நூற்றாண்டு கால திட்டத்தின் ஒருபகுதிதான் இது என்பது பலருக்கு புதிய விஷயமாகவே இருக்கும்.

ரஷ்யாவின் பல துறைமுகங்கள் ஆண்டு முழுக்க பயன்பாட்டிற்கு உகந்தவையல்ல. அதனால், கருங்கடலில் கிரீமியாவிடம் உள்ள, ஆண்டுமுழுவதும் வணிக பயன்பாட்டுக்கு உகந்த கேத்ரின் தி கிரேட் என்ற warm water துறைமுகத்தை முதலில் குறிவைத்தது ரஷ்யா. விளைவு. கிரீமியாவையே தன்வசமாகிக் கொண்டது.

ஐரோப்பிய சந்தையை எளிதில் அணுகும் வழியாக ரஷ்யாவுக்கு கருங்கடல் திகழ்கிறது. அதைத்தாண்டி மத்திய தரைகடல் பகுதி நாடுகளிலும் ஆளுமையை செலுத்துவதே ரஷ்யாவின் இலக்கு. எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு தெற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய தரைகடல் நாடுகள் தன்னை மட்டுமே நம்பியிருக்கச் செய்வது ரஷ்யாவின் நீண்டகால திட்டம்.

வணிகம் மட்டுமின்றி, பாதுகாப்பு விஷயத்திலும் கருங்கடலில் எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறது ரஷ்யா. அடிக்கடி மோதலுக்கு ஆட்படும் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்னை தனது எல்லைக்குள் நுழைந்து விடாமல் இருக்க கருங்கடலை அரணாகப் பார்க்கிறது ரஷ்யா. தனது முக்கிய உற்பத்தியான ஹைட்ரோகார்பன், சிரியா சென்றடந்ததைப்போல, நேட்டோ நாடுகளின் ஆதிக்கப் பகுதிகளைத் தாண்டி சைப்ரஸ், எகிப்து, இஸ்ரேல், லிபியா, துருக்கி ஆகிய மத்திய தரைகடல் நாடுகளுக்கு கொண்டு செல்ல ரஷ்யா விரும்புகிறது.

கருங்கடலின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளைக் கொண்டுள்ள பல்கேரியா, ருமேனியாவிடம் தனது பிடியை ரஷ்யா வைத்திருந்தது. ஆனால், நேட்டோவில் இந்நாடுகள் இணைந்ததும், கருங்கடலில் தனது நல்வாய்ப்பை இழக்கத் தொடங்கிய ரஷ்யாவுக்கு, உக்ரைனும் ஜார்ஜியாவும் நேட்டோவில் இணைய விரும்பியதால், தன் கருங்கடல் ராஜ்ஜியக் கனவு கலையும் நிலை ஏற்பட்டது.

நேட்டோ நாடுகளின் விரிவாக்கம் கருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளால் மட்டுமின்றி அமெரிக்காவாலும் தனது இதயப் பகுதிக்குள் நுழைய வாய்ப்பாகும் என்ற ஆபத்தை உணர்ந்தது ரஷ்யா. அதோடு, ருமேனியாவில் நேட்டோவின் ஏவுகணை தடுப்பு மையம் அமைக்கப்பட்டதும் ரஷ்யாவை மிரளச் செய்ததால், இனி கருங்கடல் பகுதிகளை ஆக்கிரமித்து தனது பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்வதே ஒரே வழி என ரஷ்யா கருதி விட்டது.

நேட்டோ உறுப்பினர்களை அதிகரித்து கருங்கடல் பகுதியில் ரஷ்யாவுக்கு செக் வைக்க ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் கருங்கடலை களமாக பயன்படுத்த விரும்புகின்றன. அதனால், சுயபாதுகாப்பு என்ற ஒற்றை முழக்கத்துடன் கிரீமியாவை 2014ல் பிடித்த ரஷ்யா, அடுத்ததாக உக்ரைனுக்குள் படையெடுத்து விட்டது. அதன் முடிவு வெற்றி பெற்றால், ரஷ்யாவின் கருங்கடல் கனவு ஓரளவு நனவாகக்கூடும் என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com