அழிந்து வரும் அமேசான் காடுகள்?உணவுக்காக கையேந்தும் பழங்குடியினர்! அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சிகள்
செய்தியாளர். ராஜ்குமார். ர
உலகின் மிகப்பெரிய மழைக்காடாகக் கருதப்படும் இடங்களில் தென் அமெரிக்காவில் பரந்து விரிந்துள்ள அமேசான் காடுகளும் ஒன்று. அங்கு ஏராளமான அரிய வகை உயிரினங்கள் மட்டுமின்றி, வெளி உலகத்துடன் அதிக தொடர்பில்லாமல் பல ஆண்டுகளாக காட்டையே தங்களது வாழ்விடமாகக் கொண்டு வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் காடுகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களைச் சேகரித்தல் என வாழ்ந்து வருகின்றனர் அங்குள்ள பழங்குடியின மக்கள்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 16ஆம் தேதி பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மரன்ஹாவோ மாநிலத்தின் Arariboia பகுதியில் பல ஆண்டுகளாக காட்டிற்குள்ளேயே வாழ்ந்து வந்த சுமார் 20 Awá பழங்குடியின மக்கள், திடீரெனத் தங்களது காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறி அருகில் உள்ள Guajajara கிராமத்தை அடைந்துள்ளனர். அங்கிருந்த அரசு கண்காணிப்புக் குழுவினரையும் சந்தித்து உணவுப் பொருட்களைக் கேட்டதாகவும், கிழங்கு வகை உணவுகளைப் பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான அரிய காட்சிகளை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பெரும் கவலையையும் உருவாக்கி சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. காட்டுக்குள்ளேயே தங்களுக்குத் தேவையான உணவுகளைத் தேடி வாழ்ந்து வந்த பழங்குடியின மக்கள், தற்போது ஏன் வெளியே வந்து உணவு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப் பின்னால் அவர்களின் வாழ்விடத்திற்குள் அதிகரித்து வரும் மனிதர்களின் அத்துமீறல்கள் இருக்கலாம் எனப் பழங்குடியின உரிமை அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக பிரேசில் நாட்டின் பழங்குடியின விவகாரங்களுக்கான அரசு அமைப்பான FUNAI தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்நிலையில், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் Survival International அமைப்பின் இயக்குநர் கரோலின் பியர்ஸ், இந்த Awá மக்கள் தங்களது வாழ்விடத்தின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஊடுருவல்காரர்களால் சூழப்பட்டு வருவதாகவும், இதனால் அவர்கள் வாழும் காடுகளின் பரப்பளவு தொடர்ந்து சுருங்கி வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
ஒருபுறம், அமேசான் காடுகளைப் பாதுகாப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைப் பற்றி பேசி வருகின்றன. ஆனால், மறுபுறம் அதே காடுகளையே தங்களது வீடாகவும், உணவு கிடைக்கும் இடமாகவும், வாழ்வாதாரமாகவும் கொண்ட பழங்குடியின மக்கள் தங்களது வாழ்விடங்களை இழக்கும் அபாயத்தைச் சந்தித்து வருவது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
