ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூடுதல் பாதுகாப்பு - வலுக்கும் எதிர்ப்பு
முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனக்கான பாதுகாப்பை அதிகரித்து வழங்குமாறு அரச தலைவர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து பலவிதமான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக அவருக்கு 200 போலீஸார் அடங்கிய பாதுகாப்பு பட்டாளம் அளிக்கப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் தெரிவித்து வருகின்றனர்.
இருந்த போதிலும் இதுகுறித்து இறுதி முடிவை இன்னும் எடுக்கவில்லை என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்தவாரம் நடைபெற்ற ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஊடக சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது. இதில் அக்கட்சியை சேர்ந்த திலங்க சுமத்திபால கலந்து கொண்டிருந்தார். இதன்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் திலங்க சுமதிபால தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்திலும் ரணில் விக்கிரம சிங்கவுக்கு அச்சுறுத்தல் இருந்திருக்கவில்லை. விஜேவீர தலைமையில் ஜே.வி.பி இருக்கும் போதும் அவருக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லை. அவர் மீது தாக்குதல்களும் நடத்தப்படவில்லை. அவரை அக்காலத்தில் கொலை செய்யவும் யாரும் முயற்சிக்கவில்லை. 88 மற்றும் 89ஆம் ஆண்டுகளிலும் அவருக்குப் பிரச்னை இருக்கவில்லை.
அதிக எல்லையற்ற பாதுகாப்பை ரணிலுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. அவரைப் பாதுகாக்க முடியாது. எனினும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில் அதனை நாங்கள் தடுக்கவும் போவதில்லை. ஆனால் ரணில் விக்கிரம சிங்கவுக்கு அச்சுறுத்தல் என ஏதாவது இருந்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தே உருவாகும்” என்றார்.