ஹாலிவுட் வீதியில் பாலியல் கொடுமைக்கு எதிராக பேரணி
பாலியல் வன்கொடுமை மற்றும் சித்ரவதையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அமைதி பேரணி நடைபெற்றது.
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது, நடிகைகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இந்த புகார் உலகளவிலான சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து உலகத்தின் பல பகுதிகளை சேர்ந்த திரையுலக கதாநாயகிகளும் தங்கள் திரைத்துறை வாழ்க்கையில் பாலியல் வன்கொடுமைகளை சந்தித்தாக புகார் எழுப்பினர். அதனை வெளியுலகிற்கு தெரிவிக்கும் வகையில் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ‘மீ டூ’ என்ற ஹேஷ் டேக்கை பதிவிட்டிருந்தனர். இந்திய திரைப்பிரபலங்கள் சிலரும் இதுபோன்று பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் வீதியில், ஹேஷ் டேக் ‘மீ டூ’ என்ற பெயரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்களும் திரளாக பங்கேற்றனர். அப்போது தாரா மெக்நமரா என்ற 21 வயது பெண் கூறும்போது, தமது வாழ்நாளின் ஒவ்வொரு முக்கிய தருணத்திலும் பாலியல் தொல்லையால் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்தப் பேரணியில் பங்கேற்றதாகவும் தெரிவித்தார். பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தப் பேரணியில் கணிசமான அளவில் ஆண்களும் கலந்து கொண்டனர்.