”உலகில் அசாதாரண சூழல்.. இந்தியப் படைகள் தயார்” - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதமாக போர் பதற்றம் நிலவிய நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 நாட்களுக்கு முன்னர், இஸ்ரேல் அமெரிக்க ஆதரவுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. Operation Epic Fury என்ற பெயரில் அமெரிக்காவும், Operation Roaring Lion என்ற பெயரில் இஸ்ரேலும் நடத்திவரும் இந்த தாக்குதலில் ஈரானின் பல்வேறு பகுதிகளிலும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முழுமையாக முடக்குவது, ஈரானின் ஏவுகணை மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளைத் தகர்ப்பது, ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகியவை இந்த தாக்குதலின் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவர் அயத்துல்லா காமேனியை இஸ்ரேல் குண்டுவீசி படுகொலை செய்தது. இதன்மூலம் 1989 முதல் ஈரானின் உச்ச அதிகாரத்தில் இருந்த அவரது 37 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. அவரின் மரணம் ஈரானை கடுமையாக கோபப்படுத்தியுள்ள நிலையில், அதற்கு ஈரான் தீவிரமாக பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த சூழலில்தான் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உலகில் நிலவும் அசாதாரணமான சூழல்கள் தற்போது புதிய இயல்பாக மாறி வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார். உலகம் தற்போது மிக வேகமாக மாறி வருவதாகவும், முன்னெப்போதும் இல்லாத வகையில் புவிசார் அரசியல் சவால்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருகாலத்தில் அசாதாரணமானது என்று கருதப்பட்ட போர்கள், தாக்குதல்கள் மற்றும் வாதங்கள், இன்றைய காலகட்டத்தில் மிகச் சாதாரணமான மற்றும் அடிக்கடி நிகழக்கூடிய நிகழ்வுகளாக மாறிவிட்டன என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் அண்டை நாடுகளிலும், சர்வதேச அளவிலும் நிலவும் இத்தகைய போர்ச் சூழல்கள், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து இந்தியா விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்த பதற்றமான சூழல்களை முன்னிட்டு ராஜ்நாத் சிங் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, இலங்கைக் கடற்பரப்பில் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா எப்போதுமே அமைதியை விரும்புவதாகவும், அதேநேரத்தில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்திய ஆயுதப் படைகள் முழுத் தயார்நிலையில் இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் இந்த உரையின்போது உறுதிபடத் தெரிவித்தார்.

