ராஜபக்சவுக்கு மேலும் பின்னடைவு: நிர்வாக குழுவில் எதிரணி ஆதிக்கம்
இலங்கையில் அதிகாரம் மிக்க நிர்வாகக்குழுவின் கட்டுப்பாட்டை ராஜபக்சவின் எதிரணியினர் வென்றுள்ளனர்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேனா, அக்டோபர் மாதம் ராஜபக்சவை பிரதமராக தேர்வு செய்தார். அவரை பிரதமராக நியமிக்க சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை எனவும் நானே பிரதமராக நீடிப்பதாகவும் ரணில் தெரிவித் தார். மேலும் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக சிறிசேனா அறிவித்தார். இலங்கை உச்சநீதிமன்றம் நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கூட்டப்பட்ட இலங்கை நாடாளுமன்ற குரல் வாக்கெடுப்பில் ராஜபக்ச தரப்பு தோல்வி அடைந்ததாக சபநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.
இந்நிலையில் மீண்டும் நாடளுமன்றம் கூடியபோது, ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க தரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் ராஜபக்ச ஆதரவு எம்.பிக்கள், எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது மிளகாய்ப் பொடி தூவினர். இந்த சம்பவங்கள் இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் நேற்று மீண்டும் கூடியது. சபாநாயகர் 12 பேர் கொண்ட நிர்வாகக்குழு பட்டியலை வெளியிட்டார். அதில் அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் 5 உறுப்பினர்கள் இடம் பெற்று இருந்தனர். அதே போல் ஐக் கிய தேசிய கட்சியில் 5 உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு உறுப் பினர்களும் இடம் பெறுவார்கள் என்று அறிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் நாடாளுமன்ற நிர்வாக நடவடிக்கைகளுக்கான குழு ராஜபக்சவுக்கு எதிரானவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதைய டுத்து சபாநாயகரின் முடிவுக்கு ராஜபக்ச தரப்பு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது