மீண்டும் ராஜபக்ச குடும்ப ஆதிக்கத்திற்குள் வந்த இலங்கை ஆட்சி..!

மீண்டும் ராஜபக்ச குடும்ப ஆதிக்கத்திற்குள் வந்த இலங்கை ஆட்சி..!
மீண்டும் ராஜபக்ச குடும்ப ஆதிக்கத்திற்குள் வந்த இலங்கை ஆட்சி..!

இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்ச, தனது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சவை, பிரதமராக நியமித்துள்ளார். இதன் மூலம் இலங்கையின் ஆட்சி மீண்டும் ராஜபக்ச குடும்பத்தின் கீழ் வந்துள்ளது.

இலங்கையின் மிகமூத்த அரசியல்வாதி டான் ஆல்வின் ராஜபக்ச. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டான் ஆல்வின் ராஜபக்ச, விஜானந்த தகநாயக்கா-வின் அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தார். டான் ஆல்வின் ராஜபக்சவுக்கு 9 பிள்ளைகள். இவர்களில் முதலாவது பிறந்தவர் சமல் ராஜபக்ச. மூன்றாவதாக மகிந்த ராஜபக்சவும், 5-வதாக கோத்தபய ராஜபக்சவும், 6-வதாக பசில் ராஜபக்சவும் பிறந்தனர். தந்தையைப் போன்று நால்வரும் அரசியல் களத்துக்குள் நுழைந்தனர். இதில் சமல் ராஜபக்ச தற்போதும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். பசில் ராஜபக்ச முன்னாள் அமைச்சர்.

டான் ஆல்வின் ராஜபக்ச மறைவுக்கு பிறகு 1970 ஆம் ஆண்டு நேரடி அரசியலுக்கு வந்த மகிந்த ராஜபக்ச, தனது 24 வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினரானார். 1994-ஆம் ஆம் ஆண்டு, சந்திரிகா குமாரதுங்க அமைச்சரவையில், தொழிலாளர் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ராஜபக்ச, 2004-ஆம் ஆண்டில் இலங்கையின் 13-வது பிரதமராக பொறுப்பேற்றார்.

அடுத்த ஆண்டே அதாவது 2005-ல் இலங்கையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மகிந்த ராஜபக்ச. இந்த தேர்தலில் சகோதரருக்கு உதவும் வகையில், அமெரிக்காவில் வசித்து வந்த கோத்தபய இலங்கை திரும்பினார். 1971-ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் இணைந்த கோத்தபய 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் பணியாற்றிவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.

மகிந்த ராஜபக்சவின் அரசில், கோத்தபய ராஜபக்சவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது அரசு எதிர்ப்பாளர்களின் குரல்களை நசுக்கினார் என கோத்தபய மீது குற்றச்சாட்டுகள் உண்டு. சிறுபான்மையின மக்கள் ஒரு வித அச்சத்துடனே வாழும் நிலைக்கு ஆளாகினர். குறிப்பாக ஈழப்போரின் போது தமிழர்களை படுகொலை செய்தார், மனித உரிமை மீறலில் ஈடுபட்டார் என பல குற்றச்சாட்டுகள் இவர் மீது உண்டு. பத்திரிகையாளர்களை மிரட்டிய புகாரும் இவர் மீது சொல்லப்படுவதுண்டு.

2009-ல் ராணுவ தளபதி பதவியிலிருந்து நீக்கப்பட்ட பொன்சேகா, 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2014-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியடைந்தார். எனினும் இருவரும் பின்னர் கைகோத்துக் கொண்டனர். கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கம் செய்த சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். எனினும், உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்ததால், ரணில் மீண்டும் பிரதமரானார்.

இந்த நிலையில்தான் இலங்கை அதிபர் தேர்தலின்போது, பொதுஜன முன்னணியின் அதிபர் வேட்பாளராக கோத்தபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டார். இவருக்காக மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நமல் உள்ளிட்டோர் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டனர். இலங்கையின் பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்களின் பெருவாரியான ஆதரவை பெற்ற கோத்தபய இலங்கையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோத்தபய வெற்றி பெற்றதால், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து எதிர்பார்த்தபடியே, தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவை, பிரதமராக நியமித்துள்ளார் அதிபர் கோத்தபய. முன்பு அண்ணன் தலைமையின் கீழ் தம்பி பணியாற்றினார். தற்போது, தம்பி அதிபராக இருக்கும் நிலையில், அண்ணன் பிரதமராகியுள்ளார். இதன் மூலம் இலங்கை மீண்டும் ராஜபக்ச குடும்பத்தின் ஆளுகையின் கீழ் வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com