வளைகுடா நாடுகளில் மிகவும் முக்கியமானது கத்தார். இந்த நாடு பிற வளைகுடா நாடுகளில் இருந்து தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறது, அல்கய்தாவுக்கு அடைக்கலம் அளிக்கிறது, வெளி நாடுகளில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது போன்ற குற்றச்சாட்டுகளை கத்தார் மீது பிற இஸ்லாமிய நாடுகள் முன் வைக்கின்றன. சவுதி அரேபியாவின் பரம எதிரியான ஈரானுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் செயல்படுகிறது என்பதும் கத்தார் மீதான மற்றொரு முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது.
முதலில் பஹ்ரைன், பின்னர் சவுதி அரேபியா, அதன் பிறகு எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், லிபியா, ஏமன், மொரிசியஸ், மௌரிடானியா என அடுத்தடுத்து இஸ்லாமிய நாடுகள் கத்தாருடனான உறவைத் துண்டித்துக் கொண்டன. அரபு நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே சிறிய உரசல்கள், விரிசல் இருந்தாலும், மிகப்பெரிய பிளவு ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் பிளவு உடனடியாக வந்தது என்று கூறிவிட முடியாது. கடந்த சில ஆண்டுகளாகவே கத்தாருக்கும் பிற நாடுகளுக்கும் இடையே உரசல் இருந்து வந்திருக்கிறது. கடந்த வாரத்தில் இந்த உரசல் தீவிரமடைந்தது. சவுதி அரேபியாவைக் கடுமையாக விமர்சித்து கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி கூறியதாகவும், சில நாடுகளில் இருந்து தூதர்களை விலக்கிக் கொள்வதாகவும் அந்நாட்டு அரசு ஊடகங்களில் செய்தி வெளியானது. ஈரானை அரபு நாடுகள் தனிமைப்படுத்துவது கூடாது என்று மன்னர் கூறியதாகவும் செய்திகள் வந்தன. இதுதான் பிரச்னைக்கு உடனடிக் காரணமானது. இது ஹேக்கர்களின் செயல் என கத்தார் கூறியது. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அதை ஏற்கவில்லை.
கத்தாரின் அரச குடும்பத்தினர் நடத்தும் அல் ஜசீரா உள்பட கத்தாரில் இருந்து செயல்படும் முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு சவுதி அரேபியா தடைவிதித்தது. பஹ்ரைனில் இயங்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், ஈரான், ஹெஸ்புல்லா இயக்கம், ஹமாஸ் அமைப்பு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு ஆகியவற்றுக்கு அடைக்கலம் அளிப்பதாக கத்தார் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
19 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட, கணிசமான எண்ணெய் வளத்தை வைத்திருக்கும் நாடு முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.