புடினுக்கு புற்றுநோய் அறுவைசிகிச்சை? - உக்ரைன் போரை இனிமேல் வழிநடத்துவது இவர்தானா?
ரஷ்ய அதிபர் புடின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக செல்ல உள்ளதாகவும், இந்த நேரத்தில் முன்னாள் உளவுத் தலைவர் ரஷ்யாவை கட்டுப்படுத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்றும், அவர் சிகிச்சையில் உள்ளபோது போது ரஷ்யாவை முன்னாள் கேஜிபி புலனாய்வு அதிகாரி நிகோலாய் பட்ருஷேவ் கட்டுப்படுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 வயதான பட்ருஷேவ் உக்ரைன் போரின் முக்கிய மூளையாக கருதப்படுகிறார். மேலும், இவர் புடினின் நம்பிக்கைக்கு பாத்திரமான நபராகவும் அறியப்படுகிறார். புடின் சிகிச்சைக்கு செல்லும் பட்சத்தில் உலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கும் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை இவரே வழிநடத்துவார் எனவும் கருதப்படுகிறது.
வயிறு புற்றுநோய், பார்கின்சன் நோய் மற்றும் ஸ்கிசோஆஃபெக்டிவ் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் 69 வயதான ரஷ்ய அதிபர் புடின் ஏற்கனவே அறுவை சிகிச்சையை தாமதப்படுத்தியுள்ளார். ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது, ஆனால் அது தாமதமானதால் இந்த வாரம் அறுவை சிகிச்சை நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவல்கள் எதுவும் ரஷ்யாவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.