உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா எடுத்த அடுத்த நடவடிக்கை: கடும் எதிர்ப்பை பதிவு செய்த அமெரிக்கா

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா எடுத்த அடுத்த நடவடிக்கை: கடும் எதிர்ப்பை பதிவு செய்த அமெரிக்கா
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா எடுத்த அடுத்த நடவடிக்கை: கடும் எதிர்ப்பை பதிவு செய்த அமெரிக்கா

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளை சுதந்திரப் பிராந்தியங்களாக அங்கீகரித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அந்த பகுதிகளுக்கு ரஷ்ய படைகளை அனுப்பவும் அவர் உத்தரவிட்டுள்ளது போருக்கு வழிவகுத்துள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் தொலைக்காட்சி வழியாக ரஷ்ய நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் விளாடிமிர் புடின், “டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் - ஆகிய பகுதிகளின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அங்கீகரிக்க வேண்டியது அவசியம் என நான் கருதுகிறேன். இப்பகுதிகளில் ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலை உக்ரைன் நிறுத்திக்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் கடும் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதென்பது, ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். அதனாலேயே அதை எதிர்க்கிறோம். மேற்கத்திய நாடுகளுக்கு இருக்கும் ஒரே குறிக்கோள், `ரஷ்யா முன்னேறக் கூடாது’ என்பதுதான். ஆகவே இவ்விஷயத்தில் ரஷ்யா என்ன நடவடிக்கை எடுத்திருந்தாலும் அதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும்” எனத் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற புடினின் உரையைத் தொடர்ந்து, டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர குடியரசுகளாக அறிவிக்கும் உத்தரவுகளில் புடின் கையெழுத்திடும் காட்சிகள் வெளியாகின. தனது இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும்படி ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் புடின் கேட்டுக்கொண்டார்.

பின்னர் உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட ரஷ்ய ராணுவத்திற்கு புடின் உத்தரவிட்டார். டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளை சுதந்திர குடியரசுகளாக அங்கீகரிக்கும் புடினின் உத்தரவு குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புடினின் இந்த அங்கீகரிப்புக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பெல்கின்,  ராஜங்க ரீதியாக தீர்வு காணவேண்டும் என்ற வாக்குறுதியை புடின் மீறிவிட்டார்” என குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் புடினின் அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் அதிபர் வோலோடைமிர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடி `அந்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதுகாப்பதில் அமெரிக்க உறுதுணையாக இருக்கும்’ என மீண்டும் உறுதியளித்தார். நட்பு நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பைடன் உறுதியாக தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மற்றும் ஜெர்மனியின் பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் விவாதித்தனர் என சொல்லப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள உக்ரைன் பகுதிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. இதனிடையே, பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரான், `ரஷ்யாவை குறிவைத்து பொருளாதார தடை விதிக்கவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே உக்ரைன் விவகாரம் தொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com