அணு ஆயுத சோதனை | அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா.. புதின் அதிரடி உத்தரவு!
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
அணு ஆயுத சோதனை நடத்த இருக்கும் அமெரிக்கா
அமெரிக்காவில் இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் உள்ளூர் மட்டுமல்லாது, உலக நாடுகளையும் மிரட்டும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது அமெரிக்காவும் அணு ஆயுத சோதனை நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுத சோதனையை நடத்துகின்றன. ஆனால் அவர்கள் இதை பேச மாட்டார்கள். நாங்கள் வேறுபட்டவர்கள் என்பதால் இதை (அணு ஆயுத சோதனையை குறிப்பிடுகிறார்) பேசுகிறோம். மக்களுக்கு என்ன நிகழ்கிறது என்பது தெரியாதவாறு, அவர்கள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனையை மேற்கொள்கின்றனர். நீங்கள் சிறிதளவு மட்டுமே அதிர்வுகளை உணர்கிறீர்கள். உலகளாவிய கண்காணிப்புகள் இருந்தாலும், இத்தகைய அணு ஆயுத சோதனைகளை மறைமுகமாக நடத்த முடியும். நாங்களும் இந்தச் சோதனையை நடத்த இருக்கிறோம். ஏனென்றால், அவர்கள் நடத்துகின்றனர். அவர்கள் சோதனை செய்வதாலும், மற்றவர்கள் சோதனை செய்வதாலும் நாங்களும் சோதனை செய்ய இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறேன், வடகொரியாவும் சோதனை செய்து வருகிறது, பாகிஸ்தானும் சோதனை செய்து வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த நாடுகள் எங்கு சோதனை நடத்துகின்றன என்பது அமெரிக்காவுக்கு தெரியாது. ஆனால் சோதனையை அவர்கள் நடத்துகிறார்கள். சோதனை செய்யாத ஒரேநாடு அமெரிக்காதான். சோதனை செய்யாத ஒரே நாடாக நாங்கள் இருக்க விரும்பவில்லை. மற்ற நாடுகளின் சோதனை காரணமாக, நாங்களும் சோதனை நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன். அந்தச் செயல்முறை உடனடியாக தொடங்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், ட்ரம்பின் இந்தக் கருத்தை பாகிஸ்தானும், சீனாவும் மறுத்துள்ளன. மறுபுறம், ட்ரம்பின் இந்த நடவடிக்கை, உலக அரங்கில் மிகுந்த கவலையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இம்முடிவு, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா இடையே அணு ஆயுதப் போட்டியை துாண்டிவிடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 1992ஆம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது 33 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தச் சோதனையை தொடங்க இருக்கிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவு
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உளவுத்துறை உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து, அணு சோதனை தொடங்கும் முன் தேவையான தகவல்களை சேகரித்து, பாதுகாப்பு கவுன்சிலில் பரிசீலித்து, பரிந்துரைகளை வழங்க வேண்டும் என புடின் உத்தரவிட்டுள்ளார். எனினும்,அமெரிக்கா முதலில் சோதனைகளை நடத்தினால் மட்டுமே ரஷ்யா அதைச் செய்யும் என்றும் புடின் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க அதிகாரிகளுக்கு புடின் அறிவுறுத்தி உள்ளார்.
இதனால், ரஷ்யாவின் Novaya Zemlya பகுதியில் உள்ள ஆர்க்டிக் சோதனை மையம், குறுகிய காலத்திலேயே சோதனைகளை நடத்த தயாராக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா சமீபத்தில் மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அணுசக்தியால் நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 21ஆம் நூற்றாண்டைப் பொறுத்தவரை, வடகொரியா தவிர எந்த நாடும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவில்லை. ஆனால், தற்போது அமெரிக்காவே இதைச் செய்வதற்கு அறிவுறுத்தியிருப்பதால், இந்தச் சோதனைகள் உலகளாவிய நிலைமையை மேலும் பதற்றமாக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

