உலகம்
ரஷ்யாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு - ஒரே நாளில் 2,558 பேருக்கு கொரோனா
ரஷ்யாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு - ஒரே நாளில் 2,558 பேருக்கு கொரோனா
ரஷ்யாவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 558 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அதிபர் புதின் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இங்கு 21 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 148 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது ரஷ்யா அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் மாஸ்கோ நகரில் தான் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து வரும் 19ஆம் தேதி வரை மாஸ்கோவில் ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்படும் என மேயர் செர்ஜி அறிவித்துள்ளார். மளிகைக் கடை மற்றும் மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும் என்றும் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் செயல்படும் என மாஸ்கோ நிர்வாகம் கூறியுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை டிஜிட்டல் முறையில் கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனிடையே வீடியோ கான்பிரன்சிங் மூலம், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அதிபர் புதின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாவதாகக் கூறியுள்ளார். மிக மோசமான சூழலை எதிர்கொள்ள நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் மாஸ்கோ மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ரஷ்யாவில் ஏற்கனவே லட்சக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை ரஷ்யா குறைத்துக் காட்டுவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

